sssயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த சம்பவத்தைக் கண்டித்து, வடக்கில் எதிர்வரும் 25ம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட்,, ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆகிய ஏழு கட்சிகள் கூட்டாக இந்த அழைப்பை விடுத்துள்ளன.

கடந்த 21ம் திகதி யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக இன்றையதினம் மாலை 3.30க்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 4 அங்கத்துவ கட்சிகளும் மேலும் மூன்று கட்சிகளும் இணைந்து அவசர கலந்துரையாடல் ஒன்றை மாலை 5.30 மணிவரையில் நடத்தியிருந்தன. இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற சகல கட்சிகளினதும் கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பிலேயே ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வட மாகாணத்தில் வர்த்தக அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமது ஆதரவினை இந்த ஹர்த்தாலுக்கு வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றார்கள். இதேபோல் அரசியல் கட்சிகளும் தங்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

இதற்காக சகல அரச நிறுவனங்களும், பாடசாலைகளும் முழுமையாக மூடப்பட்டு போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டு முழுமையான எதிர்ப்பினை காட்டுவதற்கு தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஏழு தமிழ் கட்சிகள் சார்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.