யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.
பல்வேறு இன்னல்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் தமது இளமைப் பராயக் கல்வியை தொடர்ந்து, பல்கலைக்கழக அனுமதியை பெற்றதால் இனி ஒரு வளமான எதிர்காலத்தை தரிசிக்கலாம் என்ற நம்பிக்கைக் கீற்றுடன் இருந்த அந்த மாணவர்கள் படுகொலைக்குள்ளானது மிக்க வேதனைக்கும் கண்டனத்துக்குமுரியது.
சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தி சமூகத்தில் அச்சமற்ற நிம்மதியான சூழலை ஏற்படுத்தும் கடப்பாட்டைக் கொண்டுள்ள பொலிசார், பொறுப்பற்ற விதத்தில் துப்பாக்கிச் சூட்டை நடாத்தி இரு இளம் உயிர்களை பலி கொண்டுள்ளார்கள் என்றே கருதவேண்டியுள்ளது.துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான எந்தவொரு தேவையும் அந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லையென்றே நம்பப்படுகின்றது. சிவில் விடயங்களில் இராணுவ கெடுபிடிகளிலிருந்து மெல்ல விடுபட்டு வரும் வடக்கு-கிழக்கு மக்களின், சிவில் பாதுகாப்பு விடயங்களில் பொலிசார் நீதி நேர்மையுடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையை இவ்வாறான சம்பவங்கள் முற்றிலும் சிதறடித்துவிடும்.
தமது பிள்ளைகளின் கல்விக்காக பல்வேறு சுமைகளைத் தாங்கி இனி ஓர் ஒளிமயமான வாழ்வு கிடைக்குமென்ற அந்த மாணவர்களின் பெற்றோர்களின் நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எனது கிராமமான கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுலக்சனின் பெற்றோரை நான் நீண்ட நாட்களாக அறிவேன். அவர்கள் தங்களின் மகனின் கல்வியும் வாழ்வும் குறித்து கொண்டிருந்த கனவுகள் ஏராளம். இம் மாணவர்களின் இழப்பு பெற்றோர்களுக்கு ஈடுசெய்யப்படமுடியாத பேரிழப்பு.
இப்படுகொலை தொடர்பான விசாரணை ஜனாதிபதியின் உத்தரவையடுத்து உடனடியாக ஆரம்பிக்கப்பட்டிருப்பது சற்று ஆறுதலளிக்கின்றபோதிலும் இழுத்தடிப்புகள் எதுவுமின்றி விசாரணை நடைபெற்று சம்பவம் தொடர்பாக உண்மைகளை பகிரங்கப்படுத்தி பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளுகின்றேன்.