யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜர் கையளிப்புடன் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த மகஜரானது யாழ். பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர் ஒன்றியத் தலைவர்களினால் யாழ் அரசாங்க அதிபர் மற்றும் வட மாகாண ஆளுனர் சார்பாக அவரது பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டு அவர்கள் ஊடாக ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் போராட்டம் அமைதியான முறையில் முடிவுற்றது. இதனையடுத்து துண்டிக்கப்பட்டிருந்த ஏ9 வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியதுடன் யாழ் மாவட்ட செயலக பணிகளும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதேவேளை மாணவர்களின் போராட்டத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள எந்தவொரு பீடங்களிலும் கல்விச் செயற்பாடுகள் நடைபெறமாட்டாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சார்பாக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கந்தசாமி ரஜிவன் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இறந்த இரு மாணவர்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும், சிறு வயதிலிருந்து அவ்விரு மாணவர்களையும் வளர்ப்பதற்கு ஏற்பட்ட செலவையும் அவ்விரு மாணவர்கள் வேலை செய்வதன் மூலம் கிடைக்கின்ற தொகையையும் அவ்விரு பெற்றோர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையை மாதாந்தம் வழங்க வேண்டும். மாணவி வித்தியா கொலை வழக்கிற்கு நீதி கிடைக்காதது போல் எமது மாணவர்களுக்கும் நீதி கிடைக்காமல் போவதை தவிர்க்கவேண்டும்.
அமைதி வழியில் மேற்கொள்ளப்படும் இப்போராட்டத்திற்கு நீதி கிடைக்காதுவிடின் வேறு வடிவங்களில் போராட்டம் திசை திருப்பப்படும். எமது மாணவர்கள் இப்போதும் கொந்தளிப்புடனேயே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவருடைய உரையை சிங்கள மொழியில் சட்ட பீட மாணவன் சாமர, ஆங்கிலத்தில் மருத்துவ பீட மாணவ ஓன்றியத் தலைவர் ஏ.அலெக்ஸ் ஆகியோர் வாசித்தனர்.