stalin_newகாவிரி பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக தி.மு.க.வின் முயற்சியில் சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, அனைத்து விவசாய சங்கங்கள், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், பாரதீய ஜனதாக் கட்சி ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பினாலும், அக்கட்சி இடம்பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டமைப்பில் உள்ள பிற கட்சிகளான மதிமுக, சி.பி.ஐ., சி.பி.எம். ஆகியவை இந்தக் கூட்டத்தை புறக்கணிக்க விரும்பியதால், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என அறிவித்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இது தொடர்பாக கடிதம் ஒன்றை மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பி, தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், சட்டமன்றச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், பிரச்சனையை திசை திருப்பும் மத்திய அரசின் போக்குக்குக் கண்டனம், ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு இழப்பீடு தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் விவசாயிகளின் உரிமை பாதுகாப்புக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை யார் கூட்டியிருந்தாலும் திமுக அதில் கலந்துகொண்டிருக்கும் என்றும், யாரும் அதற்கு முன்வராததால் தாங்கள் அதைச் செய்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆனால், காவிரி பிரச்சனையைவிட ஒரு சிலருக்கு திமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சிதான் அதிகமாக இருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வெற்றிகரமாக நடந்துவிடக்கூடாது என ஊடகத்துறையிலே உள்ள சிலர் ஆர்வம் காட்டுவதாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, தொடர்ந்து இந்த கூட்டம் குறித்த செய்திகளை திரித்து செய்திகளை பரப்பும் பணியை ஊடகங்கள் செய்வதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார