north-02யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய வட மாகாண நகரங்களின் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வட மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை முழு கடையடைப்பு அமைதியாக நடைபெற்ற போதிலும், மாலை கிளநொச்சியில் இடம்பெற்ற சாலை மறியல் போராட்டத்தின்போது, காவல்துறையை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.வீதியில் வாகனங்களை செல்லவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைப்பதற்காக சென்ற காவல்துறையினர் மீது அடையாளம் தெரியாத ஒருவர் உடைந்த பாட்டிலால் தாக்கியபோது, சமர விக்கரம என்பவர் காயம் அடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கலகத் தடுப்பு படையினர், நிலைமையை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

மீண்டும் கிளிநொச்சி இரணமடு பகுதயில் எ9 வீதியில் டயர்களை எரித்து வாகனப் போக்குவரத்தை தடைசெய்ய முயன்ற மற்றொரு குழுவினரை கலைத்து நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வட மாகாணத்தில் நடைபெற்ற இந்த கடை அடைப்புக்கு, ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய வட மாகாண நகரங்கள் மற்றும் சிறுநகரங்களிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன. பாடசாலைகள் நடைபெறவில்லை. அரச அலுவலங்கள் வங்கிகள் என்பன செயற்பட்ட போதிலும் ஊழியர்களின் வருகையிலும் வீழ்ச்சி காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் மட்டுமே இயங்கின. குறுந்தூர சேவைகள் இயங்கவில்லை.
யாழ் நகரில் காவல்துறையினர், சுற்றுக்காவல் நடவடிக்கை உட்பட பல பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்தனர்.

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இது பற்றி தெரிவிக்கையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதையும், மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் அரச பயங்கரவாதமாக பார்ப்பதாகவும், இது மாதிரியான சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாது என்கிற வகையில் அரசின் நடவடிக்கைகைள் அமைய வேண்டும் என கோருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

north-01 north-02 north-03 north-034jpg