indiaயாழ் பல்கலைக்கலக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட திருமாவளவன், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டம் குறித்து திருமாவளவன் கூறும்போது, தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும், பயங்கரவாத சட்டத்தை திரும்ப பெற வேண்டும், ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசு தொடர்ச்சியாக செய்து வரும் துரோகங்களை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

சீமான் கூறும்போது, இலங்கையில் கூலி உயர்வு கேட்டு போராடி வரும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாணவர்கள் இருவரும் வேகமாக சென்றதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறுவதை எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளாது என்றார்.

இந்தப் போராட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டதாக தமிழக செய்திகளில் கூறப்பட்டுள்ளது