maithri-and-ranilஉலகவாழ் இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் தீபத்திருநாள் அனைவருக்கும் புத்தொளி வீசும் தீபத் திருநாளாக அமைய வாழ்த்துகின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டினதும் சமூகத்தினதும் சுபீட்சம் அந்த நாட்டில் நிலவுகின்ற சமாதானம் மற்றும் சகவாழ்வினாலேயே உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே அனைவரது மனங்களிலும் சகவாழ்வும் நல்லிணக்கமும் மிளிரவேண்டும் என்பதே இன்றைய தீபாவளி தினத்தின் எமது பிரார்த்தனை என்றும் ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.ஐக்கியமென்பது இன்றைய உலகின் இருப்புக்குத் தேவையான அடிப்படை நிபந்தனையாகியுள்ள பின்னணியில், நாம் அனைவரும் ஆழமான பிணைப்புடனும் உண்மையான புரிந்துணர்வுடனும் செயற்படுவது அவசியமாகும்.

உலகவாழ் இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இத் தீபத்திருநாள் அனைவருக்கும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு பண்டிகையாகவும் அவர்களது வாழ்வில் புத்தொளி வீசும் தீபத் திருநாளாகவும் அமைய வாழ்த்துகின்றேன் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தீமை எனப்படும் இருளைத் தோற்கடித்து மனிதன் நல்வழியில் செல்வதன் முக்கியத்துவத்தினையும், ஒழுக்க விழுமியங்கள், நீதி, நியாயம் நிலைத்தோங்கும் சமூகமொன்றினைக் கட்டியெழுப்பப்படுவதன் தேவையினையும் தீபத்திரு நாள் மீண்டும் எமக்கு நினைவூட்டுகின்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை வழங்குவதுடன் சமாதானமாகவும், ஐக்கியமாகவும் வாழ்வதற்கான ஞானம் எனும் விளக்கை ஏற்றிக்கொள்ள அனைவரும் தீபாவளித் திருநாளை ஓர் முன்மாதிரியாக்கொள்வோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிளவுபட்டுப் பிரிந்து செல்வது இலகுவான விடயமாகும். எனினும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து ஒரே மனதுடன் நன்மைக்காக செயற்படுவது என்பது பாரிய சவாலாகக் காணப்படுகிறது. அதன் காரணமாகவே அனைத்து பேதங்களையும் நீக்கி மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை வழங்கி சமானதாமாகவும், ஐக்கியமாகவும் வாழ்வதற்கான ஞானம் எனும் விளக்கை ஏற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.

அதற்காக தீபாவளித் திருநாளை ஓர் முன்மாதிரியான வழிமுறையாகவும், உறுதியான பங்காளியாகவும் மாற்றிக் கொள்ள முடியும் என்பதை நினைவுபடுத்தி, தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளப்பூர்வமாக வாழ்த்துக்களைத் தெரவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.