siddharthanதமிழ் மக்களுடைய உடனடி அடிப்படைப் பிரச்சினைகளான காணி விடுப்பு, அரசியல் கைதிகளுடைய விடுதலை, காணாமல் போனோர் சம்பந்தமான விடயம், வேலை வாய்ப்பு, வாழ்வாதார விடயம் போன்றவற்றுக்கே தீர்வை வழங்க முடியாது திண்டாடும் இந்த அரசாங்கம் எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கப் போகிறது என்ற கேள்வி இன்று பரவலாக எழத் தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இருந்தாலும் கூட இன்று இலங்கை அரசியல் மேடையில் சில நகர்வுகள் நடைபெறுவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு நிரந்தரமான, நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் கூட்டமைப்பினுடைய நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.     அவர் மேலும் தெரிவிக்கையில்….

கேள்வி : அரசியலமைப்பு பேரவையை வழிநடத்தும் குழுக்களின் கீழ் இயங்கும் உப குழுவொன்றின் தலைவராக நீங்கள் செயற்பட்டு வருகிறீர்கள். இந்நிலையில் அதன் செயற்பாடுகள் தற்பொழுது எந்தக் கட்டத்தில் உள்ளன?

பதில் : மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபை, பிரதேச சபைகளுக்குமிடையிலான உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஆராயும் குழுவின் தலைவராகத் தான் நான் செயற்பட்டு வருகின்றேன்.

அதாவது, மத்திக்கும் மாகாணம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் போன்றவற்றுக்கான அதிகாரங்கள், அவை எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பது தொடர்பாக ஆராய்ந்து எங்களுடைய அறிக்கையை சமர்ப்பித்திருக்கின்றோம்.

மாகாண முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் வல்லுநர்கள் பலரை  எங்களுடைய குழுவுக்கு முன்னால் அழைத்து அவர்களுடைய கருத்துகளைப் பெற்றுக்கொண்டதோடு அவர்களில் பலர் தெரிவித்த பல்வேறுவிதமான கருத்துகளையும் உள்வாங்கி எப்படியாக இருந்தால் அர்த்தமுள்ள ஒரு அதிகாரப்பரவலாக்கலை வழங்க முடியும் என்பதை ஆராய்ந்து அதற்கிணங்க ஒரு அறிக்கையை நடவடிக்கைக் குழு முன்னால் சமர்ப்பித்திருக்கின்றோம்.

கேள்வி : அரசியலமைப்பு பேரவையில் நடைபெறும் விடயங்கள் உங்களுக்கு திருப்தியைத் தருகின்றனவா?

பதில் : என்னைப் பொறுத்தவரை அங்கு நடைபெறும் விடயங்கள் முழுமையாக திருப்தியளிக்கின்றன என்று கூற முடியாது. அரசியலமைப்பு பேரவையில் பேசப்படும் மிக முக்கியமான விடயங்களான தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதியின் அதிகாரங்களை ஒழிப்பது, அதிகாரப் பரவலாக்கம் இந்த மூன்று விடயங்களில் ஒரு விடயத்தில் கூட இதுவரை கருத்தொருமைப்பாடு ஏற்படவில்லை என்றுதான் அறிகின்றோம். எதிர்காலத்தில் சில வேளைகளில் சாதகமான நிலைமைகள் ஏற்படலாம். ஆனால், இதுவரை மேற்படி விடயங்கள் தொடர்பில் எவ்வித கருத்தொருமைப்பாடும் ஏற்படவில்லை என்றுதான் நாம் அறிகின்றோம்.

உதாரணத்திற்கு தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் கருத்தொருமைப்பாடு ஏற்படுவது போன்ற நிலைமை காணப்பட்டாலும் அதிலும் குழப்பங்கள் இருப்பதாக தற்பொழுது கருத்துகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் முறைமை தொடர்பாக தற்போதைய நிலையில் இருக்கும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களை 240 பேராக அதிகரிப்பதென்றும் அதில் அறுபது சதவீதமான பிரதிநிதிகள் நேரடியாக தேர்தல் மூலம் தொகுதிவாரியாக தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் மிகுதி 40 சதவீதமான பிரதிநிதிகள் விகிதாசார தேர்தல் முறை மூலமாக தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இவ்வாறான தெரிவின்போது தொகுதிகள் அதிகமாக வருகின்றபோது வடக்கு, கிழக்கில் பிரச்சினைகள் வராது. ஆனால், வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழும் மலையகத் தமிழர்கள், முஸ்லிம் மக்களுக்கு பாரிய பிரச்சினையாக இது உருவெடுக்கும். இதன் காரணத்தினால் தான் இன்று சில அமைச்சர்கள் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

எனவே, இதுபோன்ற விடயங்களே இழுபறி நிலையில் இருக்கும் சூழ்நிலையில், அதிகாரப் பரவலாக்கலில் எவ்வாறான குழப்பகரமான சூழ்நிலைகள் இருக்கும் என்பதை அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இருந்தாலும் கூட மேற்படி பொறிமுறைகள் தொடர்பில் சுமுகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று விரைவில் ஒரு சாதகமான இணக்கப்பாடு ஏற்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி : கடந்தகால வரலாறுகள் போன்று தற்பொழுது முன்னெடுக்கப்படும் செயற்பாடும் கசப்பானதாக மாறிவிடுமோ? என்ற அச்சம் பலர் மத்தியில் காணப்படுகிறது. இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு?

பதில் : இவ்வாறான அச்சமும் சந்தேகமும் இன்று பலர் மத்தியில் இருப்பதை எங்களாலும் அவதானிக்க முடிகிறது. ஏனெனில் பேரினவாத சக்திகள் இந்த செயற்பாட்டை தீவிரமாக எதிர்க்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இதுதான் கடந்தகால வரலாறுகளும் கூட.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினுடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுவந்த அரசியலமைப்பு பிரேரணை தொடர்பான செயற்பாடுகளில் நான் அன்று பெரியளவில் பங்குபற்றியிருந்தேன். அது சம்பந்தமாக நடைபெற்ற பல கூட்டங்களிலும் நான் பங்குபற்றியிருந்தேன். அவ்வேளைகளில் அந்த பொறிமுறை மிகவும் சுமுகமாகவும் சாதகமாகவும் நடைபெற்று வந்தது. ஆனால், பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தான் அதற்கான எதிர்ப்புகள் உருப்பெற்றதுடன், அது இறுதியில் கிழித்தும் வீசப்பட்டது.

ஆனால் இன்று இடம்பெற்றுவரும் செயற்பாட்டில், தயாரிக்கும் நடவடிக்கையிலேயே சிக்கல்கள் இருக்கின்றன. எவ்வாறு இருந்தாலும் இன்று முன்னெடுக்கப்படும் செயற்பாடானது செய்து முடிக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ஏனெனில் இன்று ஏற்பட்டிருக்கின்ற சாதகமான நிலைமைகள் அண்மைக்காலங்களில் வரக்கூடிய சூழ்நிலைகள் இல்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினுடைய தீர்மானம், அதனூடாக வலியுறுத்தப்பட்டிருக்கும் அழுத்தங்கள், மாறி மாறி நாட்டை ஆட்சி செய்துவந்த இரு பெரும்பான்மைக் கட்சிகளும் இணைந்து நாட்டை ஆட்சி செய்து வரும் சூழ்நிலை, இவ்விரு கட்சிகளும் ஒரு தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும் என்று கூறிவரும் நிலைமை போன்றவை எதிர்காலங்களில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே இவ்வாறானதொரு சூழ்நிலையை நாங்கள் சரியாகப் பயன்படுத்தி நிரந்தரமான, நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடையதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் நிலைப்பாடு. அதை நோக்கித்தான் எங்களுடைய செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

கேள்வி : வட- கிழக்கு இணைப்புக்கு சில முஸ்லிம் தரப்புகள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றன. ஆனால் கூட்டமைப்பினுடைய நிலைப்பாடு வட கிழக்கு இணைந்த சமஷ்டி. இந்நிலையில் முஸ்லிம் தரப்புகளுடைய எதிர்ப்புத் தொடர்பில் கூட்டமைப்பு எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது?

பதில் : வட- கிழக்கு இணைந்த சமஷ்டிதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. அதே நிலைப்பாட்டில் தான் கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு  வருகிறது. மறைந்த தலைவர் அஸ்ரப்பினுடைய காலத்திலிருந்தே முஸ்லிம் தரப்புகள் வட- கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்புகளை வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த விடயம். அன்று வட  கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பியபொழுது சில உடன்பாடுகள் எட்டப்பட்டிருந்தன. இதுதான் கடந்தகால வரலாறு.

வட- கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் முழுமையாக எதிர்ப்பார்களேயானால் அந்த விடயம் மிகவும் கடினமானதாக அமைவதுடன், அந்த விடயம் எட்டாக்கனியாகவே போய்விடும். ஏனெனில் வட- கிழக்கு இணைப்பை எக்காலத்திலும் சாத்தியப்படுத்த விடாது தடுப்பதற்கு தென்னிலங்கையில் பெருமளவான இனவாத சக்திகள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே இவ்வாறான சக்திகளுக்கு முஸ்லிம் தரப்புகளுடைய எதிர்ப்பு பெரும் உந்துதலாக அமைந்துவிடும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் தரப்புகள் அனைவரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்படுத்தப்படும் உடன்பாட்டினை அரசியலமைப்பு பேரவையின் முன்கொண்டு செல்லும் பட்சத்தில் இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை எட்ட முடியும் என நான் கருதுகிறேன்.

கேள்வி : மைத்திரி-ரணில் அரசு மீது தமிழ் மக்கள் மிகப் பெரியளவில் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் ஆட்சி மாற்றத்துக்கு தங்களுடைய வாக்குப் பலத்தை திரண்டு வந்து வழங்கியிருந்தார்கள். இந்நிலையில் இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் செயற்படும் விதத்தில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா?

பதில் : தமிழ் மக்கள் மைத்திரி- ரணில் அரசு மீது வைத்த நம்பிக்கை இன்று படிப்படியாகக் குறைந்து வருவது உண்மைதான். வட- கிழக்கில் துரிதகதியில் நடைபெற வேண்டிய விடயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளுடைய விடுதலை, காணாமல் போனோர் சம்பந்தமான விடயம், வேலைவாய்ப்பு, வாழ்வாதார விடயம் போன்றவற்றில் புதிய அரசாங்கம் மிகவும் மந்தகதியிலும் அக்கறையற்ற விதத்திலும் செயற்பட்டு வருவதை எங்களாலும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

மேற்படி விடயங்கள் தாமதமாவதற்கு அரசாங்கத்தினால் பல்வேறு விதமான காரணங்கள் கூறப்பட்டாலும்  அரசு மீது மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தையே உண்டாக்கி வருகிறது. மேற்கூறப்பட்ட விடயங்களை செய்வதற்கு பாராளுமன்றத்தில் 2மூ3 பெரும்பான்மை பலம் தேவையில்லை. அரசு செய்ய வேண்டுமென நினைத்தால் போதும் அவற்றை நிவர்த்தி செய்ய முடியும்.

எனவே, மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளுக்கே தீர்வை வழங்க முடியாது திண்டாடும் அரசாங்கம் எவ்வாறு இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கப் போகிறது என்ற கேள்வி இன்று பரவலாக எழத் தொடங்கியிருக்கிறது.

இருந்தாலும் கூட இன்று ஒரு சில முன்னகர்வுகள் நகரத் தொடங்கியிருக்கின்றன. அதனை சுமுகமான நிலையில் கொண்டு சென்று எமக்கு சாதகமாக மாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி : சமஷ்டியை முன்வைத்துத்தான் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. ஆனால், அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் மக்கள் மத்தியில் உரையாற்றும் பொழுது ஒற்றையாட்சி என்ற பதத்தையே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் : மக்கள் மத்தியில் சமஷ்டி பற்றி பேசினால் அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு சிங்களக் கடும்போக்காளர்கள் சிங்கள மக்களை திசை திருப்பி விடுவார்கள் என்ற காரணத்திற்காக அவ்வாறு சமஷ்டி என்ற பதத்தைப் பாவிக்காது ஒற்றையாட்சி என்ற பதத்தை அரசின் முக்கிய தலைவர்கள் பேசுகிறார்களோ இல்லை அதுதான் அவர்களுடைய நிலைப்பாடோ என்பது தெரியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினுடைய ஆட்சிக் காலத்தில் ;சுது நெலும்| என்ற இயக்கத்தை ஆரம்பித்து அதனூடாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பிலும் அவை ஏன் தீர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் சிங்கள மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களையும் அந்தத் தீர்வு நோக்கிய பாதைக்கு இட்டுச்சென்றார்கள்.

அதேபோன்றதொரு இயக்கத்தை உருவாக்கி அதனூடாக சிங்கள மக்களுக்கு போதிய விளக்கங்களை ஏற்படுத்துவதனை விட்டுவிட்டு சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றையாட்சி என்று பேசிவிட்டு அரசியல் அமைப்பில் சமஷ்டியைக் கொண்டுவருவது என்பது பாரிய சிக்கல்களை உருவாக்கும். அதனை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கேள்வி : அண்மைக்காலமாக யாழ்.குடாநாட்டில் ஏற்பட்டுவரும் பதற்ற நிலைமை தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?

பதில் : யுத்தத்திற்குப் பின்னர் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வந்த குற்றச் செயல்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவர புலனாய்வுத் துறையினரோ பொலிஸாரோ முன்வராததே இன்றைய பதற்ற சூழ்நிலைகளுக்கு காரணமாகும்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யாது, தண்டிக்காது நீண்டகாலமாக அவர்களை சுதந்திரமாக நடமாட விட்டதன் விளைவே இன்றைய பதற்றமான நிலைமைக்குக் காரணம். யுத்த காலத்தில்கூட வடக்கில் இவ்வாறான பாரியளவிலான குற்றச்செயல்கள் நடந்ததில்லை. எனவே இன்று அதிகரித்துள்ள இந்தக் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை.

அண்மையில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கதொரு விடயம். குற்றச் செயல்களை கட்டுப்படுத்துகின்ற அதேவேளை, அப்பாவி மக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பொலிஸாரின் கடமை. ஆனால் அவர்கள் அந்தக் கடமையிலிருந்து தவறியதன் விளைவுதான் பல்கலைக்கழக மாணவர்களது மரணம்.

எனவே, எதிர்காலத்தில் யாழ்.குடாநாட்டில் குற்றங்களை தடுத்து அங்கொரு அமைதியான சூழலை உருவாக்க வேண்டியது அரசினதும் பொலிஸாரினதும் கடமையாகும். இவ்விடயம் தொடர்பாக நாம் பலதரப்பட்டவர்களுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றோம். 

கேள்வி : தமிழ் மக்கள் பேரவையினால் அண்மையில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி தொடர்பில் தென்னிலங்கையில் பல சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில் : இவ்வாறானதொரு பேரணியை நடத்த வேண்டிய சூழ்நிலையை உண்டாக்கியதே தென்னிலங்கையின் செயற்பாடுகள்தான். அரசாங்கம் தமிழ் மக்களுடைய பல விடயங்களில் பாராமுகமாக இருந்து கொண்டிருக்கின்ற அதேவேளை, செய்யக்கூடிய விடயங்களில் கூட அசமந்தப் போக்கிலேயே இருந்து வருகிறது. மேலும், புதிய அரசியலமைப்பு பொறிமுறையும் தற்பொழுது தீவிரமடைந்து வருகின்ற சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டிய தேவை ஒன்று இன்று ஏற்பட்டிருக்கின்றது. அதன் காரணமாகவே எழுக தமிழ் பேரணியை நடத்தியிருந்தோம். இப்பேரணி எவருக்கும் எதிராக செய்யப்பட்டதல்ல. மாறாக தமிழ் மக்களுடைய உணர்வுகளை வெளிக்கொணர்ந்து ஒரு நியாயமான தீர்விற்கு அரசாங்கம் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில்  அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதனால்தான் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்ற அதேவேளை, ஒப்பந்தங்கள் பல கைச்சாத்திடப்பட்டிருந்தன. பின்னர்  அவ் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டிருக்கலாம். ஆனால் தமிழர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை இவ்வாறான பேரணிகள், அழுத்தங்கள் மூலம் உணர்த்தியதன் காரணத்தினால்தான் கடந்த காலங்களில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தார்கள். அதேபோன்றுதான் இன்றும் ஜனநாயக ரீதியில் ஒரு அழுத்தத்தை அரசுக்கு கொடுப்பதனூடாக சரியான தீர்வை எட்ட முடியும். எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டால் எம்மத்தியில் பிரச்சினைகள் இல்லை என்ற தோற்றப்பாட்டை தென்னிலங்கைக்கு நாங்களே காட்டிக் கொடுப்பதாக அமைந்துவிடும். அதன் பின்னர் தீர்வைப் பற்றி எதிர்பார்ப்பது சாத்தியமாகாது என்றுதான் நான் கருதுகின்றேன்.

கேள்வி : எழுக தமிழ் பேரணியில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஓரிருவர்கள்தான் கலந்துகொண்டிருந்தார்கள். அதில் நீங்களும் ஒருவர். இதற்கு ஏதாவது விசேட காரணங்கள் உண்டா?

பதில் : விசேட காரணங்கள் என்று கூறுவதென்றால் நான் யாழ். மாவட்ட மக்களுடன் இருப்பவன். அந்தவகையில்  தங்களுடைய உணர்வுகளை வெளிக்காட்ட வேண்டும் என்றொரு நிலைமை அந்த மக்களிடம் காணப்பட்டது. அதில் அவர்கள் தீவிரமாக இருந்தார்கள். அதன் வெளிப்பாடுதான் அந்தப் பேரணியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்களுடைய உணர்வுகளை, எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் இவ்வாறானதொரு மக்கள் அலை அணிதிரள்வது என்பது மிகப்பெரிய விடயம்.

அந்த மக்களுடன் இருப்பவன் என்ற வகையில் அவர்களுடன் உரையாடுகின்ற வேளைகளில் தங்களுடைய உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு களம் தேவை என்ற எண்ணப்பாடு அவர்கள் மத்தியில் இருப்பதை உணர்ந்தவன் என்ற வகையில்தான் நான் எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டு அந்த மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்திருந்தேன்.

கேள்வி : தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருமைப்பாடு இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகும். ஆனால் கூட்டமைப்பிற்குள் சில முரண்பாடுகள் இருப்பதான தோற்றப்பாடுகள் காணப்படுகின்றன. இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?

பதில் : தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகும். கூட்டமைப்பில் இருக்கின்ற நான்கு கட்சிகளும் மிகத் தெளிவாக அதனை உணர்ந்து செயற்பட வேண்டும். கூட்டமைப்பின் ஒற்றுமை விடயத்தில் அதன் தலைவர் சம்பந்தன் மிக அவதானமாக விடயங்களைக் கையாள வேண்டும். முடிந்தளவிற்கு அவரும் அதனைச் சரியாக கையாண்டு வருகின்றார். ஆனால், அவற்றையும் மீறி சில விடயங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது.

வட மாகாண சபையில் இந்த வாரம் நடைபெற்ற பிரதித் தலைவர் தெரிவில் நடைபெற்ற விடயங்கள் மிகவும் அருவருக்கத்தக்கதொரு விடயமாகும். கூட்டமைப்பின் நான்கு கட்சிகளும் இணைந்து பிரதித் தலைவரைத் தெரிவுசெய்து மாகாணசபைக்கு கொண்டு சென்றிருந்தால் இவ்வாறானதொரு அசம்பாவிதம் அங்கு இடம்பெற்றிருக்காது. மாகாணசபையில் நடைபெற்ற அந்த அசம்பாவிதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது மக்கள் மத்தியில் ஒருவித அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடாகும். அதேபோல் கூட்டமைப்பை இழிவுபடுத்துவதற்கு ஏனைய கட்சிகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ஒரு விடயமாகவே இதனை நான் பார்க்கின்றேன். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் தவிர்க்கப்பட்டு கட்சிகள் நான்கும் ஒற்றுமையாக செயற்பட்டால்தான் நாங்கள் எங்களுடைய இலக்கை நோக்கிய பயணத்தை இலகுவாக கொண்டு செல்ல முடியும். இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு இதுவுமொரு சாபக்கேடாகவே அமைந்துவிடும்.

(தினக்குரல் 30.10.2016 – செவ்வி கண்டவர்: ந.லெப்ரின்ராஜ்)