கௌரவ டி. எம். சுவாமிநாதன், பா. உ. அவர்கட்கு,
சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்,
356B, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு,கொழும்பு 3
கௌரவ அமைச்சர் அவர்களுக்கு,இந்தியாவின் தமிழ்நாட்டில் மிக நீண்டகாலமாக அகதிகளாக தங்கியிருந்து, மீண்டும் தாயகம் திரும்பி வருகின்ற தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற பிரதானமான சில பிரச்சினைகள் பற்றி தங்களின் மேலான கவனத்திற்காக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
2011 ம் ஆண்டு முதல் இன்று வரையான காலப்பகுதியில் 1882 குடும்பங்களைச் சேர்ந்த 5165 இலங்கை தமிழ் அகதிகள் தாயகம் திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் தமிழ்நாட்டில் பல்வேறுபட்ட பகுதிகளில் அமைந்துள்ள 108முகாம்களிலும், வெளியிடங்களிலும் இன்னமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள்அகதிகளாக, பல்வேறுபட்ட நெருக்குதல்களிற்கு மத்தியிலும், தமது தாயகத்திற்கு மீளத்திரும்பும் கனவுகளை சுமந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே தாயகம் திரும்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம், தொழில், கல்வி, காணி, வீட்டுவசதி போன்ற அடிப்படையான விடயங்களில் காணப்படக்கூடிய முன்னேற்றங்கள் மட்டுமே, தாயகம் திரும்பும் எண்ணத்தை தமிழ்நாட்டில் உள்ள எமது மக்களிடம் மேலும்மேலும் வலுப்படுத்தும்.
மீள்சமூக ஒருங்கிணைப்புக்காகவும், போக்குவரத்துக்காகவும் பணஉதவியாக மொத்தமாக 169அமெரிக்க டொலர்களையும், வாழ்வாதார முயற்ச்சிக்களுக்காக உச்சதொகையாக ஒரு லட்சம் இலங்கை ரூபாவும், மீளகுடியேறுபவர்களுக்காக ஆறு மாதகாலத்திற்கு உலர்உணவுப் பொதிகளையும் வழங்கிவரும் தங்களின் அமைச்சு நடவடிக்கைகளை வரவேற்கும் அதேவேளை, இத்தொகையை மேலும் அதிகரித்திட அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென,மீளதிரும்பும் தாயகஉறவுகளின் சார்பாக வினயமாகக் கேட்டுகொள்கின்றேன். குறிப்பாக வாழ்வாதாரத்திற்க்கான உதவித்தொகையை இரண்டு லட்சம் இலங்கை ரூபாவரையிலும் அதிகரிக்க வேண்டும் எனவும், உலர்உணவு வழங்கும் காலத்தின் அளவை ஒரு வருடத்திற்கும் நீடிக்க வேண்டும் எனவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் தமிழ்நாட்டில் இருந்து இங்கு ஏற்கனவே வருகை தந்துள்ள தமிழர்களின் அனுபவங்களின் அடிப்படையில் கீழ்குறிப்பிட்ட விடயங்களில் தாங்களும், தங்கள் அமைச்சும், அமைச்சரக அதிகாரிகளும், சம்பந்தபட்ட திணைக்களங்களும் கூட்டாக இணைந்து தீர்வினை பெற்றுக்கொடுக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
- இந்தியாவில் இருந்து தாயகம் திரும்புவர்கள், தமது பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை இலங்கையில் பதிவு செய்யும் போது ரூபா 25,000.00அறவிடப்படுகின்றது. அகதிகளாக வாழ்ந்து வெறும்கையுடன் வருபவர்களிடம், கட்டணம் அல்லது தண்டம் அறவிடப்படும் நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட்டு, அவர்களின் அகதிமுகாம் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பிறப்பு இறப்பு பதிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
- பிறப்பு அத்தாட்சி பத்திரங்களுடன், தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள், விசேடபிரிவாக கருதப்பட்டு ஆட்பதிவு திணைக்களத்தின் ஊடாக உடனடியாக “தேசிய அடையாள அட்டைகள்”வழங்கப்பட உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- இந்தியாவில் கல்விநிறுவனங்களில் கல்வி கற்றவர்களின் கல்வி தராதரங்கள் மனிதாபிமான அடிப்படையில் கணிப்பிடப்பட்டு, இலங்கையில் தடைகள் தாமதங்கள் இன்றி கல்வியைத் தொடரவும், மதிப்பிடப்பட்டு தொழில் சந்தையில் இணையவும் பாதைகள் திறக்கப்படவேண்டும்
- வாழ்வாதார தொழில் முயற்சிகளுக்காக அரசவங்கிகளில் பிணைதாரர் இன்றி கடன் பெறப்படக்கூடியதான பொறிமுறை ஒன்றை வங்கிகளிற்கு சிபார்சு செய்யப்படவேண்டும்
- நீண்டகால இடைவெளி காரணமாக, இடம்பெயர்ந்த அகதிகளின் குடும்பங்களில் புதிதாக உருவாகியுள்ள நிலமற்ற உபகுடும்பங்களிற்குஎன,சம்பந்தபட்ட மாவட்டங்களில் அரசகாணிகள் இனம்காணப்பட்டு, வாழ்வாதார அல்லது விவசாய வளங்களுடன் கூடிய “மாதிரி குடியிருப்பு கிராமங்கள்”ஏற்படுத்தப்பட வேண்டும்.
- தாயகம்திரும்பும் அகதிகள் ஏற்கனவே வசித்த அல்லது பயன்படுத்திய நிலங்களை மீளவும் தத்தமது ஆளுகைக்கு ஏற்படுத்திக்கொள்ள இயலுமானவாறு பொறிமுறை அமுல்படுத்தப்பட வேண்டும்
மேற்கூறப்பட்ட அடிப்படையானதும் அவசியமானதுமான நடவடிக்கைகளை இயலுமானளவு விரைவாக முறைப்படுத்தப்பட்டதும், ஒருங்கிணைக்கபட்டதுமான வகையில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுமாயின், மேலும்மேலும் அதிகளவான தாயகஉறவுகள் மீள்வருகையை நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்க முடியும்.
நிச்சயமில்லாத எதிர்காலத்துடன், பலதரப்பட்ட இன்னல்களுடன், சுயமரியாதையையும் இழந்து ஏக்கங்களுடன் வாழுகின்ற எமது மக்களின் எதிர்காலம் சிறக்க அனைத்து நடவடிக்கைகளையும் கௌரவ அமைச்சர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வினயமாகக் கேட்டுகொள்கின்றேன்.
மக்கள் சேவையில், க. சிவநேசன்
மாகாணசபை உறுப்பினர்வடக்கு மாகாணசபை
கணுக்கேணி கிழக்கு, முள்ளியவளை முல்லைத்தீவு
31/10/2016