united nationsஇலங்கையில் கடந்த வருட காலங்களில் பொலிஸாரிற்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவால் ஐக்கிய நாடுகள் சபையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சித்திரவதைகள் பரவலாக பின்பற்றப்படுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டமே காரணம் என ஜநா அமர்விற்கு முன்வைத்த அறிக்கையில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரியப்படுத்தப்பட்டதாவது, இலங்கையில் நடைபெற்றுவரும் சித்திரவதை தொடர்பில் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இதுவரையில் 420 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதில் மட்டக்களப்பு மனித உரிமை அலுவலகத்திற்கு 2015 ஆம் ஆண்டு 7 முறைப்பாடுகளும், 2016 ஆண்டு 5 முறைப்பாடுகளும், கிடைத்துள்ளன. இந்த ஆண்டில் யாழ் மனித உரிமை அலுவலகத்திற்கு 2 முறைப்பாடுகளும் திருகோணமலை அலுவலகத்திற்கு 2015, 2016 ஆண்டுகளில் 5 முறைப்பாடுகளும், வவுனியா அலுவலகத்தில் 14 முறைப்பாடுகளும், அநுராதபுர அலுவலகத்திற்கு 54 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

கைது செய்யப்பட்டவரை நிர்வாணமாக்கித் தாக்குவது, தடிகள், பொல்லுகள், இரும்புகளை பயன்படுத்தி தாக்குவது உட்பட பலவகையான சித்திரவதை முறைகள் பொலிஸாரிற்க எதிராய் பதிவாகின்றது. அறிவிக்கப்படாத தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டமை குறித்த முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் சித்திரவதைகள் குறித்து எங்களுக்கு தகவல் வழங்கியள்ளனர் என்றும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.