aarpattamதமக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கோரி சேவையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, “இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு” குறிப்பிட்டுள்ளது.

ஓய்வூதியம் பெற நிர்ணயிக்கப்பட்ட கால எல்லையான 12 வருடங்களை பூர்த்தி செய்யாது இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் கடந்த 31ம் திகதி முதல் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். எதுஎவ்வாறு இருப்பினும், இவர்களுக்கான ஓய்வூதியமாக கொடுப்பனவொன்றை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் எதிர்வரும் பெப்ரவரி மாதம்முதல் இந்தக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் தமக்கு கொடுப்பனவுகள் எதுவும் வேண்டாம் என, “இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு” சுட்டிக்காட்டியுள்ளது. 2014ம் ஆண்டு அமைச்சரவை அனுமதி வழங்கியமைக்கு இணங்க ஓய்வூதியமே தமக்கு வழங்க வேண்டும் என கூறி, இன்றும் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.