அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் இறக்காமம் பகுதியில் மாணிக்கமடு கிராமத்தின் அருகே, மாயக்கல்லி மலைமீது அத்துமீறி வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை திடீரென வந்த பௌத்த பிக்குகளைக் கொண்ட ஒரு குழுவினரால், தமிழ் கிராமமான மாணிக்கமடுவை அடுத்துள்ள மாயக்கல்லி மலைமீது புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. அந்தப் பகுதியில் பௌத்தர்கள் எவரும் வசிக்காத நிலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமையானது அந்தப் பகுதியில் வாழும் தமிழ்ப்பேசும் மக்களிடையே அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியது.
இது குறித்து, அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன் அவர் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு, மக்களுடன் கலந்துரையாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக, ஆராய்வதற்கு நேற்று அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.