fishing-talksபுதுடில்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், கடலில் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை தாக்க மாட்டோம் என அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார்.

மேலும், மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா – இலங்கை பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்திய – இலங்கை அரசுகளிடையே பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. என்றாலும் மீனவர்கள் தாக்கப்படுவது நீடித்து வருகிறது.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக டெல்லியில் கடந்த 2-ம் திகதி இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், இலங்கை மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இரு நாட்டு அமைச்சர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அமைந்துள்ள ஜவகர்லால் நேரு பவன் வளாகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களான சுஷ்மா சுவராஜ், மங்கள சமரவீர, விவசாய அமைச்சர்களான ராதா மோகன் சிங், மங்கள சமரவீர, அமைச்சர்களான பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது பற்றி பேச்சுவார்த்தையின் போது விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் அமைச்சர் ராதா மோகன் சிங் பேசுகையில், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விழுப்புரம் மாவட்டம் முகையூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும், இராமேசுவரம் மற்றும் எண்ணூரில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்போது அவர் கூறினார். இலங்கை அமைச்சர்கள் பேசுகையில், கடலில் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கமாட்டார்கள் என்று உறுதிகூறியுள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது,

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இழுவை வலைகளின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது,

இரு தரப்பிலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவித்து சம்பந்தப்பட்ட நாடுகளிடம் ஒப்படைப்பது தொடர்பான விதிமுறைகளை உருவாக்குதல், கண்காணிப்பு தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தல் ஆகியவை இந்த கூட்டுக்குழுவின் பணிகள் ஆகும்.

இந்த கூட்டுக்குழுவில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்படை, கடலோர காவல்படை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்று இருப்பார்கள். இந்த குழுவினர் 3 மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து பேசுவார்கள். மேலும் இரு நாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களும் 6 மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 6 மாதங்களுக்கு ஒருமுறை இரு நாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேச ஏற்பாடு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இருநாட்டு மீன்வளத்துறை அமைச்சகங்கள் இடையேயான முதல் கூட்டம் கொழும்பில் எதிர்வரும் ஜனவரி 2-ம் திகதி நடைபெறும். இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

இரு தரப்பு மீனவர் அமைப்புகள் முன்வைத்த கோரிக்கையின்படி, கடற்படை மற்றும் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது எந்த வகையான வன்முறையையும் பிரயோகிக்கக் கூடாது என்றும், அவர்கள் தாக்கப்படக்கூடாது என்றும், அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை பரஸ்பரம் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இந்திய, இலங்கை கடலோர காவல் படைகளுக்கு இடையே நேரடி தொலைபேசி (‘ஹாட்லைன்’) போன் வசதி ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இரு நாட்டு மீன்வளத்துறை மந்திரிகள் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், 115 படகுகளையும் விடுவிப்பது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை கட்டாயம் விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறோம்.
மீனவர்கள் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பது மட்டுமே தீர்வு ஆகாது. ஆழ்கடல் மீன்பிடிப்பு தொடர்பாக பயிற்சி அளிப்பது, உபகரணங்கள் வழங்குவது போன்ற பல்வேறு வழிகளில் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சித்து வருகிறது, இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.