sampanthanகிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தனது கணவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி, கிளிநொச்சிக்கு, நேற்று விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் போராளியான 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான நடராசா சபேஸ்வரன் என்பவர், கடந்த 23ஆம்திகதி விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவரிடம் அவரது மனைவி குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது கணவர், முன்னாள் போராளியாவார். இறுதி யுத்தத்தின் போது என் கணவர், இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் 2010ஆம் ஆண்டு, நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டார்.

“திருமண நிகழ்வு ஒன்றுக்காக இந்தியா சென்றபோது, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அதன் பின்னர், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

தனது கணவர், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு குடும்பஸ்தராக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளமையால், தானும் குழந்தையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.