sdfdயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பெண்கள் மற்றும் விதவைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக ஐ.நா. மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரோனெஸ் அனெலி தெரிவித்துள்ளார் .

வடக்கு கிழக்கில் மனித உரிமைகள் மற்றும் உதவி தேவைப்படும் சிறுவர்கள் பெண்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். யாழ் கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பெண்கள் மற்றும் விதவைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு எவ்வாறான உதவிகள் தேவைப்படுகின்றது என்பது குறித்தும் தமக்கு விசேட அறிக்கை ஒன்று சமர்ப்பி க்குமாறு இதன்போது அவர் கேட்டுக்கொண்டார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பெண்கள் மற்றும் விதவைகளுக்கு வாழ்வாதார ரீதியில் அவர்களை வலுப்படுத்த தாம் நிதியுதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் பிரித்தானிய அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் ஜோன்ஸ் டய்யூறிஸ் தலைமையில் வடமாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராசா. பா.சத்தியலிங்கம், ப.டெனீஸ்வரன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.