maithri ranilஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாண்டு நிறைவில் புதிய அரசியலமைப்பும், நாட்டிற்கான புதிய அபிவிருத்தித் திட்டமும் நடைமுறைக்கு வருமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாதுலுவாவே சோபித தேரரின் ஓராண்டு நிறைவு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் யாப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதோ அல்லது நாடாளுமன்றத்தினதோ, அல்லவெனவும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அது அமைவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய தேர்தல் முறை, நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குதல், விசேட நீதிமன்றம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்திவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனமும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அதிகாரப் பகிர்வு விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், எனினும் அது அனைத்து மக்களது உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும் வகையில் அமைவது முக்கியமெனவும் கூறியுள்ளார்.

அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் இரு பிரதான கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டு அதற்கேற்ற வகையில் புதிய யாப்பு உருவாக்கப்படுமெனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.