ranilஅம்பாறை, இறக்காமம், மாணிக்கமடு, மாயக்கல்லிமலை பிரதேசத்தில் பலாத்காரமாக நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை, ஒருவார காலத்துக்குள் அங்கிருந்து அகற்றப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அலரி மாளிகையில், அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பின்போதே, பிரதமர் மேற்கண்ட வாக்குறுதியை வழங்கியுள்ளார். குறித்த சந்திப்பின்போது “அம்பாறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகே, குறித்த சிலை தொடர்பில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றி அமைச்சர் ஹக்கீம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துரைத்துள்ளார்.

இவற்றை செவிமடுத்த பிரதமர், பலாத்காரமாக நிறுவப்பட்ட சர்ச்சைக்குரிய சிலையை அகற்ற ஒரு வார காலம் அவகாசம் கேட்டுக்கொண்டதுடன், அதற்கான நடவடிக்கைகளை தான் முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தாகவும், ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.