atmவவுனியாவில் பல காலமாக வங்கிகளிலுள்ள இலத்திரனியல் பணப்பறிமாற்றத்தில் (ஏ.ரி.எம்) கொள்ளையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் நால்வரை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் அண்மைக் காலங்களாக வங்கியிலுள்ள ஏ.ரி.எம். இயந்திரங்களில் பணம் கொள்ளையிடப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ. பெரேரா தலைமையில் பொலிஸார் இரகசியமாக விசாரணைகள் மேற்கொண்டு வந்துள்ளனர்.இதன்போது நூதனமான முறையில் இயந்திரங்களைக் கையாண்டு அதற்குள் கமராவினை பொருத்தி ஏ.ரி.எம். அட்டையின் இலக்கத்தினை தெரிந்துகொண்டு அதன் பின்னர் பணம் அட்டையினை தயாரித்து திருட்டு செயலில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியாவைச் சேர்ந்த இருவரும் வெளிநாட்டில் வசித்து வந்த இலங்கையர் ஒருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருமென தெரிவிக்கப்படுகிறது. இவர்களிடமிருந்து ஏ.ரி.எம். இயந்திரங்களுக்கு பொருத்தப்படும் உபகரணங்கள் உட்பட இலத்திரனியல் பொருட்கள் பலவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.