welikada.....வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொல்லப்பட்டடமை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 09ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைச்சாலை கைதிகளுக்கும், பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தின் பின்னணி தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறு குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 27 கைதிகள் கொல்லப்பட்டு நான்கு வருடங்களாகிய நிலையில் இதுவரையில் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில், வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி பந்துல அத்தப்பத்து, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்குணசேன தேனபது மற்றும் சிறைச்சா லைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் சட்ட ஆலோசகர் லலித் அந்தாஹெந்ததி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர், இந்த விடயம் தொடர்பில் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த விடயம் மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த கொலை விவகாரத்தின் பின்னணி என்னவென்று விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளுமாறு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.