இறுதிக்கட்ட போரின்போது இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச பங்களிப்புடனான கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
மேலும் உண்மைகளை கண்டறிதல், பாதிக்கப்பட்டவர்களுக்க நீதியை வழங்குதல் நட்ட ஈட்டை பெற்றுக் கொடுத்தல் மற்றும் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் ஆகிய நான்கு விடயங்களை உறுதிப்படுத்தும் வகையில் நிரந்தரமான பொறிமுறை ஒன்றை உருவாக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்காக உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அதற்கு அமைவாக நடவடிக்கைகள் காலதாமதம் இன்றி இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும். இதற்கு சர்வதேச பங்களிப்புகள் இன்றியமையாததாகும்.
எனவே உண்மைகளை கண்டறிவதற்கான பொறிமுறையில் சர்வதேச கலப்பு நீதிமன்றம் அத்தியாவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேச கலப்பு நீதி மன்றம் அநாவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.