mcயாழ் மாநகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இன்று ஆறாம் நாளாகவும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 10 வருடங்களாக தொழிலில் ஈடுபடும் தம்மை நிரந்தரமாக்க கோரி கடந்த திங்கட்கிழமை முதல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரித்துள்ளனர். தற்காலிக பணியாளர்கள் 127 பேருக்கும் நியமனம் கிடைக்கும் வரை இப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் குறித்த பணியாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை யாழ் மாநகரசபை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டு வருவதால் தற்போது நகரில் சுகாதார சீர்கேடுகள் நிலவுகின்றது. குறிப்பாக யாழ் நகரப் பகுதியில் உள்ள உணவகங்களின் கழிவுகள், துர்நாற்றம் வீசும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அங்காடி வியாபாரிகளின் கழிவுப் பொருட்கள், ஏனைய கடைகளின் கழிவுப் பொருட்கள் அங்காங்கே தேங்கி காணப்படுகின்றன.

எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக உணவகங்களை மூட உரிமையாளர்கள் நேற்று யாழ் வணிகர் கழக நிர்வாக சபையுடனான கூட்டத்தின்போது தீர்மானித்துள்ளனர். இது தவிர பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது மௌனமாக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புக்களை உணர்ந்து உரிய சுகாதார தொழிலாளர்களுடன் உடனடி பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டு நிலைமையை சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.