mcயாழ். மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள் கடந்த ஏழு நாட்களாக தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தால் நகரம் பெரும் குப்பைமேடாக மாறியுள்ளதுடன், நோய்த் தொற்றுக்களும் ஏற்படும் அபாயத்தையும் எட்டியுள்ளது.

யாழ். மாநகர சபைக்குட்பட்ட சந்தை தொகுதிகள், வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள், வீதிகள், கழிவு நீர் வாய்க்கால்கள் ஆகிய இடங்களிலே இவ்வாறு குப்பைகள் தேங்கி கிடந்து பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பொது கழிப்பறைகளில் மலங்கள் அகற்றப்படாமையால் அவை பூட்டப்பட்டும் காணப்படுகின்றது. யாழ். மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்களில் அமைய அடிப்படையிலான சுகாதார ஊழியர்கள் தமக்கான நிரந்தர நியமனம் வழங்கோரி முன்னெடுக்கும் இப் போராட்டத்திற்கு நிரந்தர நியமன தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்து பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக யாழ். மாநகர சபையில் 382 சுகாதார தொழிலாளர்கள் நிரந்தர நியமனத்தில் உள்ள நிலையில் மேலும் 200 சுகாதார தொழிலாளர்கள் தேவைக்கேற்ற விதத்தில் உள்வாங்கப்பட்டிருந்ததுடன் அவர்கள் அமைய அடிப்படையிலான சம்பளத்திலேயே பணிக்கமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே குறித்த அமைய அடிப்படையிலான பணியாளர்களையே நிரந்தரமாக்குமாறு கோரி மாநகர சபையின் அனைத்து சுகாதார தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த போராட்டத்தால் யாழ். மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள் எங்கும் பெரும் குப்பை மேடுகள் காணப்படுவதுடன் கழிவு நீர் வாய்க்கால்களில் கழிவு நீர் தேங்கிய நிலையில் காணப்படுகின்றது. இவற்றை விட யாழ். மாநகர எல்லைக்குள் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு இலட்சம் மக்கள் வந்து செல்லுகின்ற நிலையில் அவர்கள் பயன்படுத்துவதற்காக யாழ். பேரூந்து நிலையம் வியாபார கட்டிடத் தொகுதி என்பவற்றுள் பொது மலசலகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மலசலகூடங்களின் கழிவுகள் தொடர்ச்சியாக ஏழு நாட்களாக அகற்றப்படாமையால் அக்கழிவு கிடங்குகள் நிரம்பி மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றன. இதனால் மலசலகூடங்கள் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.