ஜனாதிபதியாக பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 30 இலட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள் என டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் வரும் 2017 ஜனவரி 20ம் திகதியன்று ஜனதிபதியாக பதவியேற்க உள்ளார். இதனிடையே தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த டிரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20 அல்லது 30 இலட்சம் வெளிநாட்டினரை உடனடியாக வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், குற்றப் பின்னணியில் இருப்பவர்கள், ரௌவுடிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள் என சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைந்து இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.