வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள 2500ரூபா தண்டப் பணத்துக்கு எதிராக தனியார் பஸ் ஊழியர்கள் இன்று நள்ளிரவுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சகல பஸ் சங்கங்களுடனும் இணைந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும், இதற்காக அனைத்து பஸ் சங்கங்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நாம் இன்று தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளோம். அரசாங்கத்தின் பதில் திருப்தியளிக்காதுவிடின் வேலை நிறுத்தம் உறுதியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை அபராதத்தொகை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகளும் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அபராதத் தொகை 2500 ரூபாவாக உயர்த்தப்பட்டமைக்கு எதிராக அரசாங்கம் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளையும் இணைத்துக்கொண்டு நாடாளுமன்றை சுற்றி வளைத்து போராட்டம் நடத்தப்படும் என இலங்கை சுயதொழில் முச்சக்கர வண்டி தொழில் சங்க சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், நாம் இந்த அபராதத் தொகை அதிகரிப்பினை எதிர்க்கின்றோம்.முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அரசாங்கம் எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை. முச்சக்கர வண்டி தொழிலில் ஈடுபடுவோர் நிர்க்கதி யான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் குறைந்த பட்ச அபராதம் இது வரையில் 20 ரூபாவாக காணப்பட்டது. தற்போது இந்தத் தொகை 2500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு தொகை உயர்த்தப்பட்டமையை நாம் எதிர்க்கின்றோம். கட்டண அதிகரிப்பு குறித்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படாவிட்டால் , முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சாரதிகளை இணைத்துக் கொண்டு போராட்டம் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.