maampirai-people26 வருடங்களாக சொந்த நிலத்தினை இழந்து தவிக்கும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படபோதிலும் அவர்களின் மீள்குடியேற்றம் இன்னும் நிறைவேறவில்லை.

வலிகாமம் வடக்கு மாம்பிராய் கிராமம் கடந்த ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டபோதிலும் பொலிஸார் மீள்குடியேற விடாது தடுத்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை ஜே-233 கிராமசேவகர் பிரிவுக்கு உட்ப்பட்ட மாம்பிராய் கிராமம் கடந்த ஜூன் மாதம் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டது. மாம்பிராய் கிராமத்தில் வசித்துவந்த 25 குடும்பங்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து மீள்குடியேறுவதற்கு மக்கள் தயாராகினர். எனினும் இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் இரண்டு தினங்களாக துப்பரவுப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமது காணிகளுக்குள் சென்று பார்வையிட்டு வருதற்கு அனுமதியளிக்கப்பட்டபோதிலும், மீள்குடியேற்றத்தினை பொலிஸார் தடுத்துவருவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இது தொடர்பில் யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் கூறுகையில்,

குறித்த பகுதியிலுள்ள பொதுமக்களின் வீடுகளில் பொலிஸார் இருப்பதாகவும், பொலிஸாருக்கென பிரத்தியேகமாக காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் மக்களின் வீடுகளிலிருந்து வெளியேறுவதாக பொலிஸார் தெரிவித்ததாக யாழ். மாவட்ட செயாலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.