dfgfgfகௌரவ குழுக்களின் பிரதித் தலைவர் அவர்களே!

இந்த புதிய நல்லாட்சி அரசினுடைய இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் சகலருக்கும் நன்மை பயக்கும் துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சியை நோக்கி என்ற குறியீட்டுடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

இதிலே பல விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இந்த நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி மாத்திரமல்லாது மாணவர்களுக்கு முக்கியமாக கல்விக்கு என இப்படியாக பல நல்ல விசயங்கள் கூறப்பட்டிருந்தாலும், இந்த வரவுசெலவுத் திட்டம் நிச்சயமாக நடுத்தர அல்லது வறுமைக் கோட்டுடன் வாழக்கூடிய மக்களுக்கு முழுமையான ஒரு பயனைக் கொடுக்கக்கூடிய ஒரு வரவுசெலவுத் திட்டமாக பார்க்க முடியாமல் இருக்கின்றது.இதிலே என்னென்றால் இந்த பெறுமதிசேர் வரியை அமுல்படுத்திய பிறகு, அதற்கும் மேலாக பல வரிகள் சுமத்தப்பட்டு வாழ்க்கைச் செலவுக்கு அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டு பல பொருட்களுக்கு விலைகள் குறைக்கப்பட்டிருக்கின்றது. சீனி, பால்மா போன்ற பல நுகர் பொருட்களுக்கெல்லாம் ஒரு கட்டுப்பாட்டு விலை அல்லது ஒரு நிர்ணயிக்கப்பட்ட விலை கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இது நிச்சயமாக சாதாரண மக்களுக்கு உதவக்கூடிய விதத்திலே இருந்தாலும் கடந்த காலங்களிலே ஒருபோதுமே இந்த கட்டுப்பாட்டு விலைகள் செயற்பாட்டில் இருந்ததில்லை. கட்டுப்பாட்டு விலைகளுக்கு மீறி கறுப்புச் சந்தைகள்தான் கூடுதலாக செயற்பட்டு வந்ததை நாங்கள் பார்த்திருக்கின்றோம். ஆகவே இந்த விலைக் கட்டுப்பாடுகள் எல்லாம் சாதாரண மக்களுக்கு பிரயோசனமளிக்குமா என்ற ஒரு கேள்வி நிச்சயமாக இருக்கின்றது.

அதைவிட இந்த வரவுசெலவுத் திட்டத்திலே ஒரு விடயமுள்ளது. ஜனாதிபதி அவர்களுடைய புகை அற்ற நாடு என்ற ஒரு கருப்பொருள் இருக்கின்றது. 20ஆம் ஆண்டளவிலே அதை இல்லாமற் செய்வதாக அவர் கூறியிருக்கின்றார். அதற்கு இலங்கை புகையிலைக் கூட்டுத்தாபனத்திடம் 500 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாகக் கொடுங்கள் என்று கேட்பது, எவ்வளவு ஒரு பொருத்தமான விடயம் என்று எனக்குத் தெரியவில்லை. இலங்கை புகையிலைக் கூட்டுத்தாபனம் தங்களுடைய வியாபாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு 500 மில்லியனைக் கொடு என்று கேட்பது நடக்கின்ற விடயமா? இது நடந்தாலும் கூட அது ஏறக்குறைய ஒரு இலஞ்சம் மாதிரி இருக்க மாட்டாதா? இதுபோன்று சில முரண்பாடுகள் இருந்தாலும்கூட இந்த வரவுசெலவுத் திட்டத்தைப் பொறுத்தமட்டில் சில நல்ல விடயங்களும் இருக்கின்றன.

எங்களுடைய நாடு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடு. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டிலே விவசாயத்திற்கு பெரிய அளவிலே ஊக்குவிப்பு கொடுக்கக்கூடிய ஒதுக்கீடுகள் எதையுமே எங்களால் பார்க்கக்கூடியதாக இல்லை. ஏனென்றால் மிக நீண்டகாலமாக நான் வடகிழக்கிலே பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ரீதியிலே நான் எங்களுடைய பக்கத்திலே இருந்துதான் கதைக்க முடியும்.

மீக நீண்ட அழிவுகளுக்குப் பிறகு விவசாயம், மீன்பிடி இவைகளெல்லாம் மிகப் பின்தங்கிய நிலையிலே இருக்கின்றது. இதிலே மீன்பிடியை எடுத்துக்கொண்டால் இந்த நாடு ஒரு தீவு. உதாரணமாக நோர்வேயை எடுத்துக் கொண்டால்கூட முழுமையாக வடகடல் எண்ணை தவிர மிகப் பெரிய அளவிலே மீன்பிடியிலேயே வருமானத்தை உருவாக்குகின்ற ஒரு நாடு.

ஆனால் இந்த நாட்டிலே முக்கியமாக மீன்பிடியை எடுத்துக் கொண்டால் வடகிழக்கு முக்கியமாக மன்னார் தொடக்கம் முல்லைத்தீவு வரையிலும் இருக்கக்கூடிய கரைகளிலே கடந்த காலங்களிலே அதாவது யுத்த காலத்திற்கு முன்பு ஏறக்குறைய நாற்பது விகிதமான மீன் அந்தப் பகுதிகளிலே இருந்துதான் பிடிக்கப்பட்டிருந்தது.

யுத்தத்திற்கு பிறகு அங்கு பல பிரச்சினைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இராணுவத் தலையீட்டால் உருவாக்கப்பட்ட பிரச்சினை, அந்த கரையோரங்களில் முக்கியமாக மயிலிட்டி, தையிட்டி பகுதியிலே இருந்த மக்கள் எல்லாம் இன்று முகாம்களிலே வாழ்கின்றார்கள். அந்தப் பகுதி மக்கள் ஒரு காலத்திலே மிகப் பெரியளவிலே கடற்தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். அதாவது, பத்து அல்லது பதினைந்து லொறிகளுக்குக் குறையாமல் மீன் ஒவ்வொரு நாளும் கொழும்பு சந்தைக்கு வருகிறதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இன்று அந்தப் பகுதி மக்கள் மீளக் குடியேறாமல் அந்த மக்கள் தொழில் இல்லாமல் இருக்கின்றார்கள்.
இராணுவம் மாத்திரமல்ல இந்திய தமிழ்நாட்டைச் சார்ந்த மீனவர்களுடைய ஊடுருவல், அத்துமீறி எங்களுடைய பகுதிகளிலே கடற்தொழில் செய்கின்றமை தெரிந்ததே. அண்மையிலே பல பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தாலும் தொடர்ந்தும் அத்துமீறல்களால் எங்களுடைய கடற் தொழிலாளர்களின் மீன்பிடி வேலைவாய்ப்புக்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அது மாத்திரமல்ல இந்த பல்தேசிய கம்பனிகளுக்கு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டு அவர்கள் பெரிய ரோலர்கள்மூலம் ஆழ்கடல் கடற்தொழிலில் ஈடுபடுவதால் தொழில் வளங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த வேளையிலே கடற்தொழிலை ஊக்குவிப்பதற்கு பெரியளவிலே எந்தவித ஒதுக்கீடுகளையும் நாங்கள் காணக்கூடியதாக இல்லை.

ஒரு நாட்டினுடைய வரவுசெலவுத் திட்டம் என்று கூறினால், அது நிச்சயமாக முழு நாட்டையும் வளப்படுத்துவதற்கு முழு நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு முழு நாட்டினுடைய அபிவிருத்தியை நோக்கிய முதலீடுகளைக் கொண்ட ஒரு விடயமாகத்தான் நிச்சயமாக பார்க்க வேண்டும். ஆனாலும் ஒரு சில பகுதிகள் மிக குறைந்த அளவு முதலீடை பெறுகின்ற இடங்களாக இருந்தால் அந்தப் பகுதிகளுக்கு விசேட கவனங்கள் செலுத்தப்பட வேண்டிய தேவைகள் நிச்சயமாக இருக்கின்றது. அப்படி விசேட கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளாக நாங்கள் வடகிழக்கை கூறுகின்றோம். மற்றைய பகுதிகளும் இருக்கின்றன நான் மறுக்கவில்லை. ஆனால் எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் வடகிழக்கைப் பார்க்கின்றோம் ஏனென்றால் முப்பது வருடகால யுத்தம் நடைபெற்று, மிகப்பெரிய அழிவுகளைச் சந்தித்திருக்கின்றோம். அது மாத்திரமல்ல அந்தப் பகுதிகளிலே எந்தவிதமான ஒரு மிகப்பெரிய முதலீடுகளோ அல்லது தொழில் வாய்ப்புக்களோ உருவாக்கப்படவில்லை. அபிவிருத்திகள் பெரியளவிலே செய்யப்படவுமில்லை.

யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் நிறைவடைந்திருந்தாலும்கூட அந்தப் பகுதிகளிலே எந்தவிதமான அபிவிருத்தியையும் எங்களால் பார்க்க முடியவில்லை. உண்மை, அதற்காக நான் முழுவதும் இல்லை என்று கூறமுடியாது. வீதி அபிவிருத்திகள் பல செய்யப்பட்டிருக்கின்றன. வீதி அபிவிருத்திகள் முக்கியமான விடயமாக இருந்தாலும் கூட அங்கு வாழ வழியில்லாமல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழுகின்ற மக்களுக்கு வீதி அபிவிருத்தியால் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ அல்லது அவர்களுடைய வாழ்க்கைச் செலவீனத்தை குறைத்துவிடவோ முடியாது.

ஆகவே, அவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய முதலீடுகள் மற்றும் அபிவிருத்திகள் உருவாக்கப்பட வேண்டியது மிக முக்கியமான விடயம். அந்தப் பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று நாங்கள் பல தடவைகள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் ஒரு நாட்டினுடைய வளர்ச்சி அந்த நாடு பூராவுமே ஒரு மிகப் பெரிய வளர்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு பகுதி வாழுகின்றபோது மற்றைய பகுதி தாழுகின்றபோது நிச்சயமாக எங்களுக்குள்ளே முரண்பாடுகள் உருவாகும். இந்த முரண்பாடுகள் பின்பு மிகப்பெரியளவிலே ஒரு பகைமையாக உருவாகிவிடக் கூடாது. ஆகவேதான் இந்த முரண்பாடுகளைக் களையக்கூடிய விதத்திலே வடக்கு கிழக்கெல்லாம் அபிவிருத்திகளை உருவாக்க வேண்டிய தேவை அரசுக்கு நிச்சயமாக இருக்கின்றது.

அங்கிருக்கக்கூடிய இளைஞர் யுவதிகள் பலர் இன்று வேலைவாய்ப்புத் தேடித் திரிகின்ற ஒரு நிலைமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இங்கிருக்கின்ற அனைவருக்குமே அது தெரியும். இந்த வேலைவாய்ப்பு என்பது எங்களைப் பொறுத்தமட்டில் ஒரு விசயத்தைப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. கூடுதலாக இந்த அரச உத்தியோகங்களை நம்பி இருக்கின்ற ஒரு தன்மை. சமுர்த்தி, வங்கி, நடத்துநர் அல்லது ஆசிரியர் இப்படியான வேலைகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த வேலைகளுக்கு முப்பது வருடங்களாக அங்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றது. இப்பகுதிகளுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கின்றபோது வடகிழக்குக்கு வெளியில் இருந்தே வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர்கள் அங்கு மாற்றப்பட்டு அங்கிருக்கக்கூடிய வெற்றிடங்களை நிரப்புகின்றார்கள். இவை நாங்கள் கண்கூடாக கண்ட விசயங்கள். சாதாரண சிற்றூழியர் தரத்திலே இருக்கக்கூடிய தொழில்களில்; கூட வெளியில் இருந்தே ஆட்கள் அனுப்பப்படுகின்றார்கள். இது எல்லாம் அங்கு இருக்கின்ற இளைஞர்கள் யுவதிகள் மத்தியிலே ஒரு மிகப்பெரிய மன அழுத்தத்தையும், ஒரு வெறுப்பையும் கொடுக்கின்ற ஒரு நிலைமையை உருவாக்குகின்றது.

பல அமைச்சர்களுடன் கதைக்கின்றபோது செய்வதாகக் கூறுகின்றார்கள். ஆனால் ஒரு சிலரைத் தவிர மிகப் பெரும்பான்மையானவர்கள் நான் சொன்ன விசயத்தையே செய்கிறார்கள். ஆகவே, ஆகக்குறைந்தது ஒரு மாவட்ட அடிப்படையிலான விகிதாசாரத்திலாவது தெரிவுசெய்தால் அங்கிருக்கக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுப்பதாக அமையும். அவர்களும் தாங்கள் தங்களுடைய வாழ்க்கையிலே முன்னேற முடியும் என்ற ஒரு நம்பிக்கையைக் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய அந்த விரக்தி நிலையில் இருந்து அவர்களை மீட்டெடுக்க முடியும்.

அத்துடன் உங்களுக்குத் தெரியும் இந்த வீட்டுப் பிரச்சினை. வடகிழக்கைப் பொறுத்தமட்டில் மாத்திரமல்ல மற்றைய பகுதிகளிலும் வீடு அற்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். ஆனால் எங்களுடைய பகுதிகளிலே ஆயிரக்கணக்கான வீடுகள் யுத்தத்தினால் அழிக்கப்பட்டிருக்கின்றது. நீண்டகாலமாக இந்த வீட்டுப் பிரச்சினை பற்றி கூறப்பட்டு வந்தாலும், இந்தியா, சுவிஸ்லாந்து, ஜேர்மனி போன்ற நாடுகள் முக்கியமாக இந்தியா ஐம்பதினாயிரம் வீடுகளைக் கொடுத்திருக்கின்றது. சுவிஸ்லாந்து ஜேர்மனி போன்ற நாடுகளும் வீட்டுத் திட்டங்களைக் கொடுத்திருக்கின்றார்கள்.

இவைகள் போதாது. இன்னும் வேண்டும் என்று நாங்கள் கோரிக்கொண்டிருக்கின்றபோது இந்த ஒட்டு வீடு அல்லது பொருத்து வீடு என்ற வீடு நிச்சயமாக எங்களுடைய சீதோஸ்ன நிலைக்கோ, அல்லது அங்கு வாழுகின்ற மக்களுடைய மன நிலைக்கோ ஒத்தது அல்ல. அந்த வீட்டிலே வாழக்கூடிய மன நிலையில் கூட அந்த மக்கள்; இல்லை. ஆகவே, அது ஒத்துவராத ஒரு விடயமாகும்.

குறுக்கீடு – அமைச்சர் மனோ கணேசன் அவர்கள்:

அமைச்சரவைக் கூட்டத்தின்போது இதற்குப் பொறுப்பான அமைச்சர் சுவாமிநாதனுடன் உரையாடியிருந்தேன். உண்மையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் உதாரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசம் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்தப் பொருத்து வீடுகளை பெற்றுத் தருமாறு தனக்கு எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்திருப்பதாக அமைச்சர் சொல்லியிருக்கின்றார்.

தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள்:

இது உண்மையாகவே எனக்கு தெரியவில்லை. ஆனாலும் எங்களுடைய பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலே கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே அதை வேண்டாம் என்று சொல்லி ஒரு கடிதத்தை ஜனாதிபதி அவர்களுக்கும் கொடுப்போம் என்று முடிவெடுத்துள்ளோம். நாங்கள் நிச்சயமாக 14பேருமே கையொப்பமிட்டு ஒரு கடிதத்தை ஜனாதிபதி அவர்களுக்கும் பிரதமர் அவர்களுக்கும், அமைச்சருக்கும் கூட பிரதியிட்டு கட்டாயமாக அனுப்புவோம். அந்தப் பொருத்து வீடுகளை நான் பார்த்திருக்கின்றேன். எனக்கு பார்த்தால் அது ஒரு கரவன் வீடு மாதிரி இருக்கின்றது. அந்த மக்களுக்கு அது பொருந்தக்கூடிய வீடு இல்லை.

சில வேலைகளில் மிக கஸ்டப்பட்ட மக்கள் ஏதோ கிடைக்கிறது கிடைக்கட்டும் என்று கூறலாமேயொழிய, அந்த வீட்டிலே வாழுவது கஸ்டம் என்பதுதான் உண்மை. நான் போய்ப் பார்த்திருக்கின்றேன். நீண்டநேரமாக அந்த மக்களுடன் கதைத்தும் இருக்கின்றேன். அவர்கள் ஏதோ கிடைக்குது என்று கூறுகிறார்களேயொழிய தங்களுக்கு ஒரு வீடு கிடைத்துவிட்டது என்று திருப்திப்பட்டது போல் எனக்குத் தெரியவில்லை. ஒரு வீடுதான் மாதிரிக்காக கட்டப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவேதான் நாங்கள் அதை எதிர்க்கின்றோம். அது சீதோஸ்ன நிலைக்கு ஒத்துவராது. அது மாத்திரமல்ல அதற்கு சொல்லப்படுகின்ற விலைக்கு மிகச் சிறந்த நீண்டகாலம் இருக்கக்கூடிய சீதோஸ்ன நிலையைத் தாங்கக்கூடிய ஒரு அழகான கல் வீடு கட்டிக்கொடுக்க முடியும்.

இந்த வரவுசெலவுத் திட்டத்தைப் பற்றிக் கூறுகின்றபோது ஒரு விசயத்தைக் கூறவேண்டும். எப்படியான திட்டங்கள் போட்டாலும் நாட்டில் சமூகங்களுக்கிடையிலே சரியான ஒரு ஒற்றுமைப்பாடு இல்லாவிட்டால் நாட்டினுடைய முன்னேற்றம் என்பது மிகவும் ஒரு கஸ்ரமான விசயமாகத்தான் இருக்கும்.

ஆகவேதான் மிகத் தெளிவாக தேசியப் பிரச்சினைக்கான ஒரு நியாயமான தீர்வு என்ற விசயத்தைப் பற்றி அடிக்கடி தமிழ் தரப்புக்களாகிய நாங்கள் கூறிக்கொண்டே வந்திருக்கின்றோம். இது ஒன்று இரண்டு வருடமல்ல சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் இன்று வரையும் பேசப்பட்டு வருகின்றது. இதற்கு என்றுமே ஒரு தீர்வு காணப்படவில்லை.

72ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய குடியரசு யாப்பின்போது அப்போது தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி இருந்தாலும்கூட தமிழரசுக் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பிலே பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது, அது சமஷ்டி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரேரணை. அந்த சமஷ்டி அமைப்பு அடைப்படையாகக் கொண்ட பிரேரணை முன்வைக்கப்பட்;டபோதும் கூட, அதை முழுமையாக அரசு நிராகரித்திருந்தது. அரசு நிராகரித்த அந்த காலகட்டத்திலே எனது தந்தையார் திரு. தர்மலிங்கம் அவர்கள் கூறியிருந்தார். பாராளுமன்றத்தில் அவர்தான் அந்த பிரேரணையை சமர்ப்பித்தும் இருந்தார். அவர் கூறியிருந்தார், நீங்கள் இந்த சமஷ்டி அமைப்பை இன்று ஏற்க மறுத்தாலும் ஆகக் குறைந்தது இந்த கச்சேரி முறைகளை இல்லாமல் செய்து மாவட்ட சபைகளை உருவாக்கி மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அந்த சபைகள் அந்த மாவட்டங்களை நிர்வகிக்கின்ற நிலைமையையாவது தாருங்கள் என்று கேட்டார். அது கூட அன்று நிராகரிக்கப்பட்டது.

அப்போது எங்களுடைய தலைவராக இருந்த தந்தை செல்வநாயகம் அவர்கள் ஒரு விடயத்தை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார். இன்று எங்களுடன் பேசி இந்தப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் மிகக் கடும்போக்கானவர்களுடன் நீங்கள் பேசவேண்டி வரும். இந்தப் பிரச்சினை ஒரு மிக வில்லங்கமான ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படப் போகிறது. ஆகவே, தயவு செய்து இந்தப் பிரச்சினையைத் தீருங்கள் என்று கேட்டிருந்தார். அவர் கூறியதையும் அன்று கேட்பதற்கே ஆளில்லாமல் இருந்தது.

77ஆம் ஆண்டு தேர்தலிலே தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாடு என்ற ஒரு கோரிக்கையிலே தேர்தலிலே நின்று, மிகப் பெரும்பான்மையான மக்கள் அதற்கு ஆணை கொடுத்தார்கள். ஆணை கொடுத்திருந்தும் 80ஆம் ஆண்டு அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையிலே இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழத்திற்கு மிக மிகக் குறைவான ஒரு நிலையை உடைய மாவட்ட சபைகளை ஏற்றுக் கொண்டது. தொடர்ந்து மாவட்டசபை சட்டங்கள் கொண்டுவரப்பட்டு மாவட்ட சபைக்கு தேர்தல் வைத்தபோது அதைக் குழப்பி யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களுடைய வீடு மற்றும் கடைகள் எரிக்கப்பட்டது. எல்லாவற்றையும் நாங்கள் ஒரு சரித்திரமாக பார்த்து வந்திருக்கின்றோம்.

அந்த நேரத்திலேயே பல பிரச்சினைகளைத் தீர்த்திருக்க முடியும். அதை விடுத்து 87ஆம் ஆண்டு மிகப்பெரிய போராட்டத்தின் பின்பு கொண்டுவரப்பட்ட மாகாணசபைகளைக் கூட ஒரு கேலிக்கிடமாக்கி சரியான முறையில் செயற்படாமல் பண்ணியது.

குறுக்கீடு – பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள்:

இந்த பொருத்து வீடுகள் சம்பந்தமாக கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு, கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஏற்று கடிதம் கொடுக்கப்பட்டதாக இந்த சபையிலே தெரிவித்திருந்தார். பொருத்து வீடுகளுக்கு எங்களுடைய கட்சி முழுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. அது பொருத்தமற்றது. அது வீடு அல்ல ஒரு இரும்புக்கூடு என்று இந்த பாராளுமன்ற சபையிலே சம்பந்தன் ஐயா அவர்கள் பேசியிருந்தார்கள். கிளிநொச்சியிலிருந்து அவ்வாறான கடிதங்கள் எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை என்பதையும் நான் இந்த இடத்திலே பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள்:

ஆகவே 87 மாகாணசபைகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் பறித்தெடுக்கப்பட்டதை நாங்கள் பார்த்திருக்கின்றோம். ஆகவேதான் ஒற்றையாட்சியின் கீழ் ஒரு நியாயமான அதிகாரப் பரவலாக்கலை செய்ய முடியாது என்று மிகமிகத் தெளிவாக நாம் கூறுகின்றோம். ஒற்றையாட்சியின் உள்ளே கொடுக்கக்கூடிய அதிகாரங்கள் எல்லாவற்றையும் வலது கையால் கொடுத்துவிட்டு இடது கையால் அல்ல வலது கையாலேயே எடுக்கின்ற நிலைiமைகளை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

இந்த யுத்தம் எப்படி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதென்பதை நீங்கள் உணரவேண்டும். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு பல நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு கொடுத்திருந்தன. அதன் பிறகு அந்த நாடுகளைச் சார்ந்த சில அதிகாரிகள் அரசியல்வாதிகளை நாங்கள் கேட்டபோது, அவர்கள் எங்களுக்குச் சொன்ன ஒரு விடயம், யுத்தத்தை நாங்கள் முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவியதற்கான காரணம் தொடர்ந்து வந்த அரசுகள் யுத்தம் நடந்து கொண்டிருக்கின்றபோது ஒரு நியாயமான தீர்வு எட்டமுடியாது ஆகவே, யுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என்று கூறினார்கள். யுத்தம் முடிவுக்கு வந்தால் நிச்சயமாக நாங்கள் ஒரு நியாயமான தீர்வைக் கொடுப்போம் என இலங்கை அரசு உறுதியளித்தது. அதனால்தான் நாங்கள் உதவினோம் என்று தெரிவித்தார்கள். ஆனாலும் சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு மறந்தது.

அதேபோல இந்த அரசும்கூட ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கின்றது. அதாவது அவர்கள் கொண்டுவந்த தீர்மானங்களுக்கு ஆதரவளித்து ஒரு தீர்வினைக் கொண்டுவருவதற்கு இணைங்கியுள்ளது.

இது ஒரு மிக நல்ல சந்தர்ப்பம். மாறிமாறி இந்த நாட்டை ஆண்ட இரண்டு கட்சிகளும் இன்று கூட்டாட்சியில் உள்ளன. ஒரு நியாயமான தீர்வாக தமிழ் மக்கள் தாங்களே தங்களுடைய அலுவல்களை பார்க்கக்கூடிய விதத்திலே ஒரு சமஷ்டி ஆட்சியின்கீழ் தீர்வைக் கொண்டுவருவதன் மூலம்தான் இந்த நாட்டிலே ஒரு நிரந்தரமான அமைதியைக் கொண்டுவர முடியும். அப்படியான ஒரு நிரந்தரமான அமைதியின் மூலம்தான் இந்த நாடு அபிவிருத்தி அடைந்து மற்றைய நாடுகளுடன் பொருளாதார ரீதியாக போட்டிபோடக்கூடிய ஒரு நிலைமைக்கு வர முடியும்.

இதற்கு நான் தயவாக இந்த சபையிலே இருக்கக்கூடிய அனைவரையும் கேட்பது, தயவு செய்து இந்த முயற்சிகளைக் குழப்பிவிடாமல் ஒரு நியாயமான தீர்வை நோக்கிய பாதையிலே நாங்கள் அனைவரும் செல்லவேண்டும். சென்று இந்த நாட்டை ஒரு அமைதியான நாடாக ஆக்க வேண்டும் என்று கேட்டு விடைபெறுகின்றேன்.

நன்றி, வணக்கம்.