gnanasara-theroநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் மீதான வழக்கை எதிர்வரும் ஜனவரி 11ம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஹோமாகம நீதவான் ரங்க திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சட்ட மா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்ற வேளை, சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக, ஞானசார தேரர் மீது குற்றம்சுமத்தப்பட்டது.

அவர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததன் மூலம், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு ஞானசார தேரருக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

எவ்வாறாயினும் அந்தக் குற்றப்பத்திரிகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஞானசார தேரர் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்