வவுனியா அரசு செயலகத்தில் சிறுநீரகநோய்த் தடுப்பு நடவடிக்கைக்கான அலுவலகம் ஒன்றை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி கருணாரத்ன சகிதம் ஆரம்பித்து வைத்த அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமாகிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, வவுனியா காவல் நிலையத்தில் சிறுநீரக நோய்த்தடுப்புக்கு வசதியாக தூய குடிநீர் நிலையம் ஒன்றையும் வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
இதன் போது பத்திரிகையாளர்களின் கேள்விகட்கு அமைச்சர் கீழ்கண்டவாறு பதிலளித்துள்ளார்-நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, நாட்டில் ராணுவ புரட்சியொன்று ஏற்படுதவற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எச்சரிக்கை செய்திருப்பது குறித்து செய்தியளார்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்,
இலங்கையில் ராணுவப் புரட்சியொன்று நடைபெறுவதற்குரிய எந்தவிதமான நிலைமையும் இல்லை ராணுவப் புரட்சியொன்று ஏற்படலாம் என்பது, தேர்தலில் மக்களுடைய ஆதரவைப் பெற்று அதிகாரத்திற்கு வரமுடியாமல் போனவர்களின் கனவேயொழிய வேறு ஒன்றுமில்லை ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் அண்மைக் காலமாக ‘ஆவா குழு’ என்ற பெயரில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்ற குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் கீழ் பலர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்பட்டிருக்கின்றதே இது ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொள்ளைச் சம்பவங்களும், பயங்கரவாதச் செயற்பாடுகளும் பொதுமக்களைப் பாதிப்படையச் செய்கின்ற நடவடிக்கைகளாகும். எனவே, இச் செயல்களில் ஈடுபடுபவர்களை எந்தவொரு சட்டத்தின் கீழாவது கைது செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதும், நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டியதும் முக்கியமாகும்.
இதில் எந்தச் சட்டமானாலும், சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களைக் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது என்பதே முக்கியமாகும் என்றார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏனைய மாகாண சபைகளுக்கான நிதியொதுக்கீட்டைக் குறைத்து, வடமாகாண சபைக்கு அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர், அவ்வாறு இடம்பெற்றிருந்தால், நிதியொதுக்கீடு குறைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு உரிய அளவு நிதி வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.
அதேவேளையில், புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில் நாட்டின் வருமானத்தில் 40 வகையான நிதியை மாகாண சபைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது, எனவே உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு செயற்படுத்தப்படும்போது, இத்தகைய நிதியொதுக்கீட்டுப் பிரச்சினைக்கு இடமில்லாமல் போகும் என்றும் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.