meenavarthinamசர்வதேச மீனவர் தினத்தையொட்டி வவுனியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இலங்கை மற்றும் இந்திய மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இருநாட்டு அரசுகளும் ஆர்வம் காட்டியிருப்பது வடபகுதி மீனவர்களுக்கு நம்பிக்கையூட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
 
இலங்கை இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கிடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இலங்கை மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து இந்திய தரப்பினருக்கு எடுத்துக் கூறுவதற்கான வாய்ப்பு கிட்டியிருந்ததாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் மரியதாஸ் தெரிவித்தார்.பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வடபகுதி மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் மொகமட் ஆலம் சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு, சுனாமியின் அழிவு ஆகியவற்றுடன் இந்திய மீனவர்களின் எல்லைதாண்டிய தொழில் நடைமுறைகள், பிற மாவட்டங்களில் இருந்து வருகி;ன்ற உள்ளுர் மீனவர்கள் கரையோரங்களில் குடியேறுவதற்கு மேற்கொள்கின்ற முயற்சிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வாரத்தில் 3 தினங்கள் மட்டுமே வடபகுதி மீனவர்களினால் கடற் தொழிலுக்குச் செல்ல முடிகின்றது. இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்று ஆலம் தெரிவித்தார்.

இது விடயங்களை கடற்றொழில் திணைக்களம் கண்டு கொள்வதில்லை. வடமாகாண மக்கள் பிரதிநிதிகளும் இவற்றில் அக்கறை செலுத்துவதில்லை என்று ஆலம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கடற்றொழிலாளர் இணையமும், இலங்கை மீனவர் ஒத்துழைப்பு அமைப்பும் இணைந்து சர்வதேச மீனவர் தினத்திற்கான அழைப்பை விடுத்திருந்தன.

இந்தத் தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களில், படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள மீனவர்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன், சுற்றுலா தேவைகளுக்காக கடலோரக் காணிகள் கையகப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும், நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி முறைகள் முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமானவை என்று மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் குறிப்பிட்டுள்ளார்