sfeவவுனியா, பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீட்டிலிருந்து 59வயது ஆண், சடலமாக செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனியில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய விக்கிரமரட்ன குணசிறி, என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜேர்மனுக்கு சென்றிருந்த இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், கொழும்பில் சத்திரசிகிச்சை செய்துக்கொண்டுள்ளார். அதனையடுத்து, மீண்டும் ஜேர்மனுக்கு சென்றுவிட்டார். எனினும், அங்குள்ள காலநிலை ஒத்துக்கொள்ளாததால் நாடு திரும்பிய அவர், பத்தினியார் மகிழங்குளத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்ததுடன், வீட்டை புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், நிர்மாணப் பணிகளுக்கு தேவையான மணல் ஏற்றி வந்த டிப்பர் சாரதி, வீட்டு உரிமையாளர், வாசலில் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த சம்பவ இடத்துக்கு வந்த வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, சடலமாக மீட்கப்பட்டவரின் குடும்பத்தினர், அண்மையிலேயே வவனியாவுக்கு வந்து சென்றதாக தெரிவித்த உறவினர்கள், 1985ஆம் ஆண்டுவரை இவர், இலங்கை பொலிஸில் பணியாற்றியிருந்ததாகவும் கூறியுள்ளனர். இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்குறித்த விக்ரமரட்ன குணசிறி என்ற குறித்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், இதனை கொலையென சந்தேகிக்கும் பொலிஸார், அதன் பின்னர் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே குறித்த ஐவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், பத்தினியார் மகிழங்குளம், ஓயார் சின்னக்குளம் மற்றும் மருக்காரம்பளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.