amal-mpபுதிதாக உருவாக்கப்படும் அரசியல் தீர்வில் பௌத்த மதத்துக்கு கொடுக்கப்படும் சகல சலுகைகளும் இந்து மதம் உட்பட சகல மதங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று செங்கலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் மதகுரு என்ற போர்வையில் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கை காரணமாக எங்களுடைய இந்த நாட்டின் சரித்திரத்தில் இந்து மதகுருக்கள் தங்களுடைய பிரச்சினைகளை சொல்வதற்கு வீதிக்கு வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்து மதகுருக்களோ கிறிஸ்துவ மதகுருக்களோ நேரடியாக இவ்வாறான போராட்டங்களில் கலந்துகொண்டதில்லை. அவர்கள் தங்களுடைய மதப் போதனைகளில் தனி மனிதன் எவ்வாறு வாழவேண்டும். குடும்பம் எவ்வாறு வாழவேண்டும். ஒரு நாட்டின் அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற போதனைகளை செய்வார்களே தவிர, அவர்கள் இவ்வாறு அரசியலுக்குள் வருவதில்லை.

ஆனால் தற்போது தமது பிரச்சினைகளை போராட்டங்கள் மூலம் தெரிவிக்குமளவிற்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். கடந்த காலத்தில் சீர்குலைந்ததைப் போன்று நல்லாட்சியிலும் இந்த நாட்டில் சட்டம் சீர்குலைந்துள்ளதை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இனவாத மதவாதக் கருத்துக்களை பரப்புபவர்களுக்க எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்கள். ஆனால் சட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.