tna-mpsஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இதில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களட கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,

இச்சந்திப்பின்போது வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், வட கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளல் மற்றும் புதிய அரசியல் சாசனம் ஒன்றை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணிப் பிரச்சினை, அபிவிருத்தி தொடர்பாக உள்ள சவால்கள், அரசியல் கைதிகளை விடுவித்தல், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதார பிரச்சினைக்கு துரித தீர்வு, காணாமல் போனவர்களால் அவர்களின் குடும்பத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் என்பன குறித்தும் ஆராயப்பட்டது.

மேலும், வடக்கு கிழக்கு மக்களின் தொழில் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியிடன் வலியுறுத்தினோம். இந்த விடயங்கள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் விரைவில் சந்திக்க உள்ளோம். அத்துடம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணும்வரை ஜனாதிபதியுடன் சில மாதங்களுக்கு ஒரு முறை சந்திப்புகளை நடத்தவுள்ளோம் என எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.

இதன்போது 16 கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைச்சாத்திட்ட கடிதம் ஒன்று, இரா.சம்பந்தனினால் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இங்கு கருத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.