கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை அமைத்துள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவான ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 7 வருடங்களுக்கு மேற்பட்ட மற்றும் நீண்டகாலமாக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, எவ்வித வழக்குத் தாக்கலும் செய்யப்படாத நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைப்படி விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.