chandrikaகுறுகிய அரசியல் நோக்கத்திற்காக இனங்களையும் மதங்களையும் இழிவுபடுத்தி அதனூடாக சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு நாட்டில் இடமில்லை என்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

வெறுக்கத்தக்க கருத்துக்கள் மூலமாக இனங்களையும் மதங்களையும் இழிவுபடுத்தி அதன் மூலம் சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவர் என்ற ரீதியில் சந்திரிகா குமாரணதுங்க விடுத்திருக்கும் அறிக்கையில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்திருக்கும் வெறுக்கத்தக்க கருத்துக்கள் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கிடையில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்தும் செயற்பாடுகள் குறித்த விடயங்கள் தமது அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் இவ்வாறான வெறுக்கத்தக்க கூற்றுக்களுக்கு கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அவற்றுக்கு இடமளிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். இத்தகைய செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட தரப்பினரின் சமூக, அரசியல் மத பின்புலங்களை கவனத்தில் கொள்ளாது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதாகவும் சந்திரிகா குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் ஆத்திரமூட்டுபவர்கள் சம்பந்தமாக தாமதிக்காது சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.