pansapஇந்தியாவில் சிறையிலிருந்து தப்பித்த, தடை செய்யப்பட்ட சீக்கிய தீவிரவாதக் குழு ஒன்றின் தலைவராகக் கருதப்படும் ஹர்மிந்தர் சிங் மின்டூவை மீண்டும் கைது செய்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிறன்று வட இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் நாபா என்ற பகுதியிலிருந்த ஒரு உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சிறையை போலிஸ் உடைகளில் வந்த ஆயுத குழுவினர் தாக்கி மின்டூவை விடுவித்தனர்.இந்திய தலைநகர் தில்லியின் புறநகர் பகுதியில், பஞ்சாபிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அவரை பிடித்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர். சிறையிலிருந்து தப்பித்தவர்களில் குறைந்தது நான்கு பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
மேலும், தேடுதல் வேட்டையின் போது போலிஸ் சோதனைச்சாவடி ஒன்றில் தன்னுடைய வாகனத்தை நிறுத்தாமல் சென்ற பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காலிஸ்தான் விடுதலைப் படை என்ற தடை செய்யப்பட்ட சீக்கிய தீவிரவாதக் குழுவின் தலைவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் ஹர்மிந்தர் சிங் மின்டூ. இரு ஆண்டுகளுக்குமுன் மின்டூ கைது செய்யப்பட்டார். கொலை முயற்சியில் ஈடுபட்டது மற்றும் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியது உட்பட தொடர் குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மூன்று போலிசார் மற்றும் ஒரு சிறை காவலர் இந்த சிறைத்தாக்குதலின் போது காயம் அடைந்துள்ளனர்.