rathakrisnanஇலங்கையில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுவதற்கு மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு முன்னணி தயாராகிவருவதாக அம் முன்னணியின் தலைவர்களில் ஒருவரான கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிரூணஸ்ணன் தெரிவித்திருக்கின்றார்.

இரு சாராரும் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு செயல்பட முடியும் என நுவரெலியா மாவட்டத்தில் இந்திய உதவி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது நம்பிக்கையும் வெளியிட்டுள்ளார்.இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ‘வட, கிழக்கு போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு மலையகத்தில் போராட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும். அது ஆயுத போராட்டமாக அல்லாமல் காத்திரமான அகிம்சை போராட்டமாக உருவெடுத்திருந்தால் இன்று மலையக மக்கள் பல வெற்றிகளைப் பெற்றிருக்க முடியும்.

வட கிழக்கு போராட்ட ரீதியாக தோல்வி அடைந்திருந்தாலும் அந்தப் போராட்டத்தின் ஊடக இன்று அவர்கள் பல வெற்றிகளைப் பெற்று வருகின்றார்கள். எனவே மலையக மக்களுடைய பிரச்சினைகளும் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டுமானால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.’ என்றார்

‘எதிர்காலத்தில் மலையக மக்களின் பிரச்சினைகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தமிழ் முற்போக்கு கூட்டணியும் பேசுவதற்கான நிலைமை உருவாக வேண்டும்.’ என்றும் தனது உரையில் வலியுறுத்திக் கூறினார்.

மலையக மக்கள் இன்று உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகளுக்காக போராட்ட வேண்டிய நிலை இன்னமும் தொடர்வதாக தனது உரையில் சுட்டிக்காட்டிய அவர் ‘சம்பள பிரச்சினை மாத்திரம் எம்முடைய பிரச்சினை அல்ல. அதுவும் ஒரு அடிப்படை பிரச்சினை. ஆனால் அதற்கு அப்பால் இன்னும் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றோம். அந்தப் பிரச்சினைகளும் சர்வதேசமயப்படுத்தபட வேண்டும்.எனவே எதிர்காலத்தில் காத்திரமான அகிம்சை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்காகச் சரியான தலைமைத்துவம் வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்ல முடியாது’ என்றும் குறிப்பிட்டார்.