யாழ். கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா-2016 நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்களது தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நேற்று 30.11.2016 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. நா.சிவநேசன் (கோட்டக்கல்விப் பணிப்பாளர், கோப்பாய்) அவர்களும், கௌரவ விருந்தினராக செல்வி ஏ.கார்த்திகா (பாழைய மாணவி, கனிஸ்ட நிறைவேற்று உத்தியோகத்தர், உரும்பிரயர் கிளை, இலங்கை வங்கி) அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துவரப்பட்டு சரஸ்வதி வழிபாடு இடம்பெற்றது. தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெற்றதை அடுத்து பாடசாலை மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. தொடர்ந்து விருந்தினர்களது உரைகள் இடம்பெற்றன.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
இந்த பாடசாலை பல துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வருவதை என்னால் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இன்று இந்த குழந்தைகள் நடாத்திய நடனம், நாடகம் என்பவற்றின் ஊடாக மிக நல்ல கருத்துக்களை மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்லியிருந்தார்கள். கல்வியே குழந்தைகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தாலும், மாணவர்களின் ஏனைய துறைகள் தொடர்பான செயற்பாடுகளும் மாணவர்களின் வளர்ச்சியிலே மிகப்பெரிய பங்கினை எடுக்கும்.
இந்த மாணவர்கள் கல்வி வளர்ச்சி பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினார்கள். மிகச் சிறந்த உச்சரிப்புடன் அவர்களின் உரைகள் இடம்பெற்றதைப் பாராட்டுகின்றேன். இங்குள்ள அதிபர், கோட்டக்கல்வி பணிப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பகுதி பாடசாலைகளை முன்னேற்ற வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறையுடனும் துடிப்புடனும் செயற்படுகின்றதை என்னால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு என்னால் முடிந்தளவு உதவிகளையும் செய்வேன்.
பெற்றோர்கள் பலர் தங்கள் அயல்களிலே இருக்கக்கூடிய பாடசாலைகளை விடுத்து பட்டிணங்களில் இருக்கின்ற பாடசாலைகளே சிறந்த பாடசாலைகள் என்ற ஒரு எண்ணக்கருத்தைக் கொண்டிருக்கின்றார்கள். இங்கிருந்து தூர இடங்களுக்கு நீங்கள் பிள்ளைகளை அனுப்பி கற்பிக்கின்றபோது உங்களுடைய பிள்ளைகளுடைய பராமரிப்புக்கள் மற்றும் அவர்களுடைய கவனம் உங்களுடைய கவனத்தில் இருந்து மிகத் தொலைவிலே சென்று விடுகின்றது. இவைகள் பிள்ளைகளை இக்கட்டான நிலைக்குள் தள்ளிவிடக்கூடும் என்பதைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.
அதிபர், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியிலே எவ்வளவு பெரிதாக அக்கறை காட்டினாலும் பெற்றோர் அக்கறை காட்டாவிட்டால் அந்தக் குழந்தைகள் கல்வியில் வளர்ச்சி காண்பது மிகக் கடினமாக இருக்கும். ஆகவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியிலே கவனமெடுப்பது உங்களுடைய குழந்தைகளுடைய முன்னேற்றத்துக்கு மாத்திரமல்ல. உங்களுடைய குடும்பங்களுடைய முன்னேற்றங்களுக்கும் மிக உறுதுணையாக இருக்கும். மிகப்பெரும்பான்மையான நேரங்கள் பிள்ளைகள் உங்களுடன் இருப்பதால் பிள்ளைகளின் கல்வி மற்றும் மற்றைய துறைகளின் வளர்ச்சியில் நீங்கள் காட்டுகின்ற அக்கறை அந்த குழந்தைகளை வளர்த்தெடுக்க பெரிதும் உதவும்.
எல்லா வளங்களிலுமே மிகப் பெரிய அழிகளை சந்தித்து வந்த நாங்கள் மீண்டும் கல்வியை வளர்க்க வேண்டும். கல்வியை வளர்க்க வேண்டுமென்றால் இந்தப் பகுதிகளிலே இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் அக்கறை கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் இந்த குழந்தைகள் கல்வியிலே வளர்ச்சியடைய முடியும்.
துரதிஸ்டவசமாக கடந்த வருடம் இலங்கையில் கல்வியில் வட மாகாணம் ஒன்பதாவது இடத்திலே நிற்கின்றது. இது மிக துரதிஸ்டமான விடயமாக இருந்தாலும் கூட அதை ஒரு பாடமாகக் கொண்டு நாங்கள் அனைவரும் கல்வியை வளர்ப்பதில் அக்கறை காட்டுவதன் ஊடாக எங்களுடைய பகுதிகளின் கல்வி வளர்ச்சி மாத்திரமல்லாது, குழந்தைகளுடைய வளர்ச்சி அந்த வளர்ச்சியினால் குடும்பங்களுடைய வளர்ச்சி குடும்பங்களின் வளர்ச்சியினால் எங்கள் சமூகத்தின் வளர்ச்சி என்பவற்றை நாங்கள் வருங்காலங்களில் உறுதிசெய்ய முடியும்.
இதை நிச்சயமாக நாங்கள் எல்லோரும் ஒரு கடமையாக எடுத்துக்கொண்டு அனைவரும் செய்ய வேண்டும். நாங்களும் அரசியல் ரீதியாக எங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களைக் கொண்டு எங்கள் பகுதிகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த எம்மாலான உதவிகளை செய்வோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து பரிசில்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்று நன்றியுரை மற்றும் பாடசாலை கீதம் என்பவற்றுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.