அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களை ஒன்று திரட்டிய குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்தில் பிரசன்னமாகுமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் மங்களராம விஹாராதிபதிக்கு இன்று அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற அசாரதாரண சூழ்நிலையில் மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி சுமணரத்ன தேரர் தனது தொண்டர்களைத் திரட்டிக் கொண்டு வந்து பொலிஸ் தடைகளுக்கு மேல் ஏறி அமர்ந்து கொண்டு கூச்சலிட்டதுடன் ஆரவாரமும் செய்திருந்தார். இதனால் மட்டக்களப்பு நகரில் அன்றைய தினம் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. கடைகள் இழுத்து மூடப்பட்டிருந்தன, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. பொதுபலசேனா அமைப்பினர் புணானைப் பகுதியில் நெடுஞ்சாலையிலும் புகையிரதப் பாதையிலும் அமர்ந்து கொண்டு வீதி மற்றும் புகையிரதப் போக்குவரத்தையும் தடை செய்திருந்தனர்.
இதன் பின்னர் பொலிஸார் மங்களராம விஹாராதிபதிக்கெதிராக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களைத் திரட்டினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இன்று கொண்டு வந்திருந்தனர்.
அதனைப் பரிசீலித்த நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 14ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த அழைப்பாணை இன்று சுமணரத்ன தேரரிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.