basilமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோரை, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த குற்றப்பத்திரிகை வாபஸ் பெறப்பட்டதை அடுத்தே கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த கட்டளையைப் பிறப்பித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க முன்னிலையில் இந்த விடயம் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆயினும், குற்றப்பத்திரிகையை திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்க எண்ணியுள்ளதாக சட்ட மாஅதிபர் இதன்போது நீதிமன்றத்திற்கு அறிவித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு கோடியோ 94 இலட்சம் ரூபா செலவில் முன்னாள் ஜனாதிபதியின் உருவத்துடன் அச்சிடப்பட்ட 50 இலட்சம் பஞ்சாங்கங்கள் விநியோகிக்கப்பட்டமை தொடர்பில், அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.