இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும், நடிகரும், பிரபல எழுத்தாளருமான சோ ராமசாமி அவர்கள் மறைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரடைந்தோம்.
சோ ராமசாமி அவர்களும் இந்திய அரசியலிலே மிகப்பெரிய செல்வாக்கினைச் செலுத்தி வந்துள்ளதோடு, ஒரு மூத்த பத்திரிகையாளராக, நடிகராக. அரசியல் ஞானியாக அவர் திகழ்ந்து வந்திருக்கின்றார்.
இவர் அநேகமான இலங்கைத் தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடன் நட்புறவைக் கொண்டிருந்தார். இதனடிப்படையில் அவருடன் எனக்கும் மிக நீண்டகாலமான ஒரு நட்புறவு இருந்தது.
அவர் கூறுகின்ற கருத்துக்கள் சில வேளைகளில் குதர்க்கமாக அல்லது எங்களுடைய கருத்துக்களுக்கு மிக மாறுபட்டதாக இருந்தாலும், நீண்ட காலத்திற்குப் பின் பார்க்கின்றபோது அவர் ஒரு அரசியல் ஞானியாகவே எனக்குத் தெரிந்திருக்கிறார்.
அவருடன் நாங்கள் பழுகுகின்றபோது, கதைக்கின்றபோது நாங்களும் தெளிவுறக்கூடிய வகையிலே சில விடயங்களை அவர் எடுத்துக் கூறுவார். அவருடைய இழப்பு இந்தியாவிற்கு ஒரு பேரிழப்பாகும்.
தமிழ் மக்களுடைய ஈழ விடுதலைப் போரிலே அவர் அக்கறை காட்டாது இருந்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென்பதிலே அவர் மிகவும் அக்கறை காட்டி வந்தார் என்பதை இங்கு நினைவு கூருகின்றேன்.
த.சித்தார்த்தன்., பா.உ.,
யாழ் மாவட்டம்
தலைவர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்),
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
07.12.2016.