ilancheliyanயாழ். ஊர்காவற்துறையில் தேர்தல் பரப்புரையின்போது 2பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணை கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், மன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் உட்பட பலர் சாட்சியமளித்திருந்தனர். கடந்த 2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை நாரந்தனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்தபோது அவர்கள்மீது தாக்குதல் மேற்கொண்ட ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களான நெப்போலியன் என அழைக்கப்படும் ரமேஸ், மதன் என அழைக்கப்படும் மதனராசா மற்றும் அன்ரன் ஜீவராஜா ஆகிய மூவரும் குற்றவாளிகளாக இணங்காணப்பட்டனர். இவர்களுள் நெப்போலியன் மற்றும் மதனராசா இங்கிலாந்தில் வசித்து வருகின்றமையினால் 1ஆம் மற்றும் இரண்டாம் குற்றவாளிகள் இன்றி மூன்றாம் குற்றவாளியான அன்ரன் ஜீவராஜாவை வைத்து வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தின் போது படுகாயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் உட்பட தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இளைஞர்களில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளானவர்களும் மன்றில் சாட்சியமளித்திருந்தனர்.

சாட்சியங்களை பதிவு செய்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் குறித்த வழக்கின் தீர்ப்பினை இன்று வழங்கினார். தீர்ப்பின் போது, 1 ஆம் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதுடன், 1 முதல் 48 குற்றங்களாக பதிவு செய்த வழக்கில்,

1 முதல் 25 வரையான குற்றங்களுக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன், 1 லட்சம் ரூபா தண்டப்பணமும், தண்டப்பணம் செலுத்த தவறின் 5 வருட கடுழிய சிறைத்தண்டனையும் அனுபவிக்கமாறும், கமல்ஸ்ரோன் மற்றும் பேரின்பநாதன் ஆகியோரின் இரட்டைக்கொலை குற்றத்திற்காக மரண தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

குறித்த 2 குற்றவாளிகளையும் சர்வதேச சர்வதேச பிடியாணையின் ஊடாக பிடித்து மன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.