d-sithadthan-m-pதமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுடைய மறைவு எம் அனைவருக்கும் மிகுந்த துயரையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆண் ஆதிக்க அரசியலில் அவர் ஒரு பெண்ணாக துணிச்சலுடனும், நேர்மையுடனும் செயற்பட்டு இன்று தனக்கென்று ஒரு முத்திரையை தமிழ்நாட்டில் மாத்திரமல்ல இந்தியா முழுவதிலும் பதித்துள்ளார்.

1984களில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவரை நான் சந்தித்து இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கதைத்தபோது, எங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் அவர் மிக யதார்த்தமாக என்னுடன் கதைத்திருந்தார்.இந்த வகையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் என்றுமே ஒரு யதார்த்தவாதியாகவும், தமிழ் மக்களுடைய விடுதலையில் யதார்த்தத்துடன் அதீத அக்கறை கொண்டவராகவுமே அவர் திகழ்ந்திருக்கின்றார்.

இலங்கையின் இறுதி யுத்த காலகட்டத்தின்போது அவர், மிகத் தீவிரமாக தமிழ்நாட்டின் சட்டசபையில் தீர்மானங்களைக் கொண்டுவந்தது மாத்திரமன்றி மத்திய அரசுக்கும் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இவருடைய இழப்பு தமிழ்நாட்டின் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, இலங்கைத் தமிழர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

த.சித்தார்த்தன்., பா.உ.,
யாழ் மாவட்டம்
தலைவர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்),
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
06.12.2016.