klinochi01மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
 
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதைக் கண்டித்தும், யுத்த மோதல்களின்போதும், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டதைக் கண்டித்தும் யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.klinochi02லலித் குகன் ஆகியோரை கண்டு பிடித்துத் தருமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்ற போதிலும், அந்த விசாரணைகள் இன்னும் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
வடபகுதியில் சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காகச் செயற்பட்டு வருகின்ற செயற்பாட்டாளர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பதற்காக மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்கான பொறிமுறையில் முக்கிய இடமளிக்கப்பட்டு, காணாமல் போனோருக்கான அலுவலகம் ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளது.

ஆயினும் இந்த பொறிமுறையை அமைப்பதிலும், அதனை உரிய முறையில் செயற்படச் செய்வதிலும் அரச தரப்பில் ஏற்பட்டுள்ள தாமதத்தை, காணாமல் போனவர்களின் உறவினர்களும் காணாமல் போனோரைக் கண்டுபிடிப்பதற்கான செயற்பாட்டாளர்களும் கண்டித்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.