muslimஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாகப் பௌத்த மதகுருமார்கள் உட்பட கடும் போக்கு பௌத்தர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கேட்டுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலங்களில் இடம் பெற்ற கடும் போக்கு பௌத்தர்களின் இன ரீதியான செயல்பாடுகள் தொடர்பாக ஆறு அமைச்சர்கள் , மூன்று இராஜங்க அமைச்சர்கள் , இரு துணை அமைச்சர்கள் உள்ளிட்ட 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும் ஒப்பமிடப்பட்ட மனுவொன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த பௌத்த கடும் போக்கு அமைப்புகள் மீண்டும் தமது செயல்பாடுகளை ஆரம்பித்திருப்பது பற்றி அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக பிபிசி தமிழோசையுடன் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கூறுகின்றார்.

முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் இழிவுப் படுத்தும் வகையில் அண்மைக்காலமாக பொதுபல சேனா போன்ற பௌத்த அமைப்புகள் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்தப் பிரச்சாரங்கள் வாயிலாக இனக்கலவரத்தை ஏற்படுத்த அந்தத் தரப்பினர் முற்படுவதால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தாங்கள் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்

தங்களால் முன் வைக்கப்பட்ட பிரச்சினைகளை செவிமடுத்த ஜனாதிபதி ” முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது எழுந்துள்ள இந்தப் பிரச்சினை தொடர்பாக சர்வ மத தலைவர்களை கொண்ட குழு வொன்றை அமைத்து ஆராய்ந்து உரிய தீர்வை காண்பது என்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வெளியே இருந்து கொண்டு முரண்பாடுகளைத் தோற்றுவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என பதில் அளித்ததாகவும் அவர் கூறுகின்றார்.

ஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து போலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்து போலிஸார் நடவடிக்கை எடுக்க தவறுவது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கொண்டு வரப்பட்டிருந்தது.

” தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க கூடாது என போலிஸாரை பணிக்கவில்லை என்றும் எந்தத் தரப்பாக இருந்தாலும் போலிஸார் தங்கள் கடமையை சரிவரச் செய்ய வேண்டும் ” என ஜனாதிபதி பதிலளித்தாகவும் முஜீபுர் ரஹ்மான் குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி தேர்தல் கொள்கை விளக்கத்தில் முன் வைக்கப்பட்ட வெறுப்பு பேச்சுக்கு எதிரான சட்டத்தை விரைவாக கொண்டு வருவது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது