vakaraiஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு வாகரை பிரதேச மக்கள் தங்கள் காணி உரிமையை வலியுறுத்தி இன்று புதன்கிழமை பிரதேச செயலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேசத்தின் சிவில் நிர்வாக மையமான பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயில் கதவுகளுக்கு பூட்டுப் போட்டு இந்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதன் காரணமாக செயலகத்தின் வழமையான அலுவல்கள் ஓரிரு மணித்தியாலயங்கள் தடைப்பட்டிருந்தன.vakarai-01jpgஇந்தப் பிரதேசத்தில் அரசியல் பின்புலத்தில் சட்ட விரோதமாக காடுகள் அழித்தல் , அரச காணிகள் வெளியாருக்கு வழங்குதல் தனியார் காணிகள் வெளியாருக்கு விற்பனை போன்ற செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடம் இந்தப் பிரச்சினைகள் குறித்து பல முறை சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் அவர்கள் உரிய தீர்வை பெற்றுத் தரவில்லை என்ற குற்றச்சாட்டை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் முன் வைத்தனர்.

அங்கு வருகை தந்த பிரதேச செயலர் ஆர். ராகுலநாயகியிடம் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவொன்று ஏற்பாட்டாளர்களினால் கையளிக்கப்பட்டது.

சட்ட விரோதமாக அரச காணிகளில் எல்லையிடப்பட்ட வேலிகள் போலிஸாரின் உதவியுடன் அகற்றப்படும் என்றும் ஏனையவை குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதேச செயலாளர் வழங்கிய உறுதி மொழியையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.