மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட வாகனேரி சிறீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த மூல விக்கிரகமான சிவலிங்கம் உட்பட ஆலயத்தின் திரைச் சீலை மற்றும் ஆலயத்தின் பொருட்கள் இனந்தெரியாதோரினால் உடைக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு பூசையை முடித்தவிட்டு இன்று அதிகாலை பூசைக்காக பூசகர் கோயிலுக்கு சென்றபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதை அவதானித்துள்ளர். குறித்த விடயத்தினை ஆலயத்தின் தலைவர் உட்பட நிருவாகத்தினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, வாழைச்சேனைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஆலய நிருவாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கி.துரைராஜாசிங்கம் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக உரிய இடத்திற்கு விரைந்த வாழைச்சேனைப் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.