துருக்கி தலைநகர் அங்காராவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டிற்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் உயிரிழந்துள்ளார். அங்காராவில் நடைபெற்ற சமகால கலை தொடர்பான கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்ட்ரிவ் நேற்று சென்றிருந்தார்.
அப்போது நிகழ்ச்சியின் நடுவே திடீரென மர்மநபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அண்ட்ரிவ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிசார் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட மர்மநபர் பலியாகியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் அடையாள அட்டையுடன் கூட்டத்தில் புகுந்து, மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.