ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நத்தார் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அங்காடி ஒன்றில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 12 பேர் பலியானதாகவும் 45 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வரலாற்று சிறப்புமிக்க கைசர் வில்கெட் நினைவு தேவாலயம் அருகே உள்ள சந்தைத் தொகுதியில் பொதுமக்கள் உணவு பொருட்கள், மதுபானங்கள், மற்றும் இனிப்பு வகைகளை பொதுமக்கள் வாங்கி கொண்டிருந்த போதும், நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போதும், அங்கு வேகமாக பயணித்த லொறி ஒன்று மோதியதால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என பெர்லின் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் பயணித்தவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
அத்துடன், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதேவேளை மேற்படி சம்பவத்தால் அந்த நாட்டிலுள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வினவிய போது வெளிவிகார அமைச்சின் செயலாளர் பிரகாஷிகா மகேஷினி கொலன்னாவ இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.