cheddiவவுனியா வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை சந்தை கடைத்தொகுதி வழங்குவதற்கான கேள்வி கோரலை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி பொதுமக்கள் இன்று காலை 9மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபையினால் நெல்சிப் வேலைத்திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சந்தைக்கட்டிடத் தொகுதிக்கான மாவட்ட மட்ட கேள்வி கோரலை உடனடியாக இரத்தச் செய்து பிரதேச எல்லைக்குள் வழங்கக்கோரி செட்டிகுளம் பிரதேசவாழ் மக்கள் இக் கவனயீர்ப்பப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளுர் வியாபாரிகளின் வயிற்றில் அடிக்காதே, செட்டிகுளம் பிரதேச சபை அதிகாரிகளே எமது பிரதேச கடைத் தொகுதியை எமது பிரதேச மக்களுக்கு வழங்கு என பல்வேறு வசனங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ப. சத்தியசீலன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

செட்டிகுளம் பிரதேச சபையின் ஆட்சி எல்லைக்குள் அமைக்கப்பட்ட இந்தச் சந்தைத் தொகுதியானது வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையாலே அதற்கான கேள்வி மனுக்கோரப்பட்டிருந்தது. அது மாவட்ட மட்டத்தில் கோரப்பட்டுள்ளமையால் செட்டிகுளம் பிரதேச சபை எல்லைப் பரப்பிற்குள் வாழுகின்ற இந்த பொதுமக்கள் அல்லது வியாபாரிகள் இதனால் பாதிக்கபட்டிருக்கின்றார்கள்.

செட்டிகுளம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் இவ்விடயத்தை வடமாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக இன்று காலை வடமாகாண முதலமைச்சரும் உள்ளுராட்சி அமைச்சருமாகிய சி. வி. விக்கினேஸ்வரனுடன் வடமாகாண சுகாதார அமைச்சர் கலந்துரையாடியபோது, தற்போது கோரப்பட்டுள்ள கேள்வி மனுக்கோரலை உடனடியாக இரத்துச் செய்வதாகவும் புதிதாக பிரதேச மட்டத்தில் இந்தக் கேள்வி மனுக்கோரலை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இறுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளரிடம் வட மாகாண சுகாதார அமைச்சருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.