sfdமட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியிலுள்ள களுதாவளை கடற்கரையில் விமானமொன்றின் பாகம் கரையொதுங்கியுள்ளது. இன்று காலை 7.30 அளவில் மேற்படி விமான பாகம் கரையொதுங்கியதாக களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வீ.ரி.சிசிர தெரிவித்துள்ளார்.

விமானத்தின் இறக்கை பகுதி ஒன்றே கரையொதுங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் கடற்படையினருக்கும், விமானப் படையினருக்கும் அறிவிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் களுதாவளை கடற்கரைக்கு வருகை தந்துள்ளனர். கரையொதுங்கியுள்ள விமானத்தின் பாகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வீ.ரி.சிசிர தெரிவித்துள்ளார். இதேவேளை பாசிக்குடா கடலில் மர்மமான பொருள் ஒன்று காணப்படுவதாக, மீனவர்கள் அன்மையில் தெரிவித்திருந்தனர். அது விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. எனினும் அந்தப் பகுதிக்கு சென்ற கடல் படையினர், அவ்வாறான எதுவும் அங்கு காணப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அந்த பாகம், காத்தான்குடி கடலின் ஊடாக கல்முனை நோக்கி மிதந்து செல்வதாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இத் தகவலையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற கடற்படையினர், களுதாவளைப் பகுதியிலிருந்து விமானத்தின் பாகம் ஒன்றை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.